பான்கார்டு அப்டேட் செய்வதாக நூதனமுறையில் மோசடி: ஹரியானாவைச் சேர்ந்த இருவர் கைது

பான்கார்டு அப்டேட் செய்வதாக நூதனமுறையில் மோசடி: ஹரியானாவைச் சேர்ந்த இருவர் கைது

மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும், பான்கார்டை அப்டேட் செய்து தருவதாகவும் சொல்லி நூதனமுறையில் பணமோசடி செய்த ஹரியானாவைச் சேர்ந்த இருவரை சென்னை சைபர் க்ரைம் போலிஸார் கைது செய்தனர்.

சென்னை, நங்கநல்லூர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஹரீஸ். இவரது மனைவி பத்மாவிற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் பான் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என சில விபரங்கள் கேட்டுள்ளார். அந்த விபரங்களைச் சொன்ன பத்மா தனக்கு எஸ்.எம்.எஸில் வந்த ஓ.டி.பி எண்ணையும் சொல்லியுள்ளார். தொடர்ந்து அவரது வங்கிக்கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதன்பின்னரே அவருக்கு தான் ஏமாற்றப்பட்ட விசயம் தெரியவந்தது.

இதேபோல் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு அவர் மின்கட்டணம் செலுத்தவில்லை என குறுஞ்செய்தி வந்தது. உடனே அந்த எண்ணுக்கு ராமகிருஷ்ணன் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர் சில விபரங்களைக் கேட்டார். அதைக் கொடுத்துள்ளார் ராமகிருஷ்ணன். தொடர்ந்து ஓ.டி.பி எண்ணையும் பகிர அவர் வங்கிக்கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் எடுக்கப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தது. இணைய வழியில் ஏமாந்த ராமகிருஷ்ணன், பத்மா ஆகியோர் சென்னை சைபர் க்ரைம் போலீஸில் இதுகுறித்துப் புகார் கொடுத்திருந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் இந்தக் குற்றச்செயல்களைச் செய்தது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித்சிங்(49), நாராயண சிங்(45) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் ஹரியானா சென்று இவர்களைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in