`ஒரு சாமானியன் பங்கு பெற்றது பெருமையாக இருக்கிறது'- விக்ராந்த் கப்பலில் பணி முடித்த பள்ளப்பட்டி காஜா மொய்னுதீன் நெகிழ்ச்சி

விக்ராந்த் கப்பலில் காஜா மொய்னுதீன்
விக்ராந்த் கப்பலில் காஜா மொய்னுதீன்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள விமானம் தாங்கி போர்க் கப்பலான  ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் நடந்த சிறப்பு  மேம்பாட்டு பணியில் பங்குபெற்று திரும்பியுள்ளார் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த  கூலச்சி காஜா மொய்னுதீன்.

இந்திய பாதுகாப்பு படையின் அதிநவீன விக்ராந்த் கப்பல் 23 ஆயிரம் கோடி ரூபாய்  செலவில் சுமார் 13 வருடங்களாக  கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கப்பலில்  30 மிக் ரக போர் விமானங்கள்,  14 குண்டு வீச்சு ஹெலிகாப்டர்கள், அதி நவீன ஏவுகணைகள்,  பீரங்கிகள்,  விமான எதிர்ப்பு பீரங்கிகள்,  நவீன ரேடார்கள் இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல்  இரண்டு ஆப்ரேஷன் தியேட்டர்கள் எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன் வசதிகளுடன்  கொண்ட மருத்துவமனையும்,  2,500 நபர்கள் தங்கும் வசதியுடன் 14 மாடி உள்ள அதிநவீன சொகுசு கப்பலாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை  இந்தியாவின் பலம் என்றும் கடல் அரசன் என்றும் வர்ணிக்கிறார்கள்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட இதில்  ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும்  தளபதிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள்  வருகையின்போது சிறப்பு அம்சங்களுடன் கூடிய அமர்விடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக  யார் பொருத்தமானவர் என்ற தேடல் நடைபெற்றுள்ளது. அதில் பள்ளப்பட்டி காஜா மொய்னுதீன் அனுப்பிய  திட்ட வரைபடம் கடற்படையினரால்  ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இதையடுத்து உடனடியாக பணிகளை ஆரம்பிக்கலாம் என அழைக்கப்பட்டு, கொச்சி சென்று  ஒரு  வார காலம் கப்பலில் தங்கி வெற்றிகரமாக அந்த வேலையை செய்து முடித்திருக்கிறார். அதற்காக கடற்படையின்  பாராட்டுடன்  கொச்சியிலிருந்து ஊர் திரும்பியுள்ளார். இது குறித்து அவருடன் பேசியபோது, "நமது நாட்டின் பாதுகாப்புப் பணியில்  ஒரு சாமானியன் ஆன நானும் பங்கு பெற்றது மிகவும் பெருமிதத்துக்குரியதாக இருக்கிறது.

காஜா மொய்னுதீன்
காஜா மொய்னுதீன்

இனி வரும் காலங்களில் நமது பிள்ளைகள் உயர் படிப்புகள் முடித்து பாதுகாப்புத் துறையில் தடம் பதிக்க வேண்டும். நமது நாட்டை போற்றுவோம், வாழ்க இந்தியா,  வளர்க பாரதம்" என்று உரத்தக் குரலில் உணர்ச்சி வசப்பட்டு சொல்கிறார் பள்ளப்பட்டி  காஜா மொய்னுதீன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in