
பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து வழிபட்டனர்.
பழநி தண்டாயுதபாணி தைப்பூசத்திருவிழா ஜன. 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் விழா நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதை தொடர்ந்து வெள்ளித் தேரோட்டம் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக தேர் ஏறும் நிகழ்வு இன்று மதியம் நடந்தது. இதைத் தொடர்ந்து மாலை 4:30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. கோயில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டவாறு வடம் பிடித்து இழுத்தனர்.
வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிப்.7-ம் தேதி இரவு தெப்பத் தேரோட்டத்திற்கு பின் கொடியிறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைகிறது.
திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவடி சுமந்து பாதயாத்திரையாக வலம் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழநி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.