மகள் மீது விழுந்த சந்தேக பார்வை... ஆண் நண்பர்களை வரவழைத்து கள்ளக்காதலனை தூக்கியது போலீஸ்: தாய் கொலையில் அதிர்ச்சி

மகள் மீது விழுந்த சந்தேக பார்வை... ஆண் நண்பர்களை வரவழைத்து கள்ளக்காதலனை தூக்கியது போலீஸ்: தாய் கொலையில் அதிர்ச்சி

பழநி அருகே கொலை செய்யப்பட்டவரின் மகளுடன் தொடர்பில் இருந்தவரே கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள்(55). பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே சென்ற அன்னம்மாள் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது, அவர் காணாமல் போன இரு தினங்களுக்கு பிறகு பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் அன்னம்மாள் சடலமாக கிடந்தார்.

உடனடியாக கிராமத்தினர் பழநி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மேலும், அழுகிய நிலையில் இருந்த உடலை உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

சம்பவம் இடத்திற்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் காவல்துறையினரால் உடனடியாக குற்றவாளியை நெருங்க முடியவில்லை. இதனிடையே, கிராமத்தில் உள்ள அனைவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இச்சூழலில், கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கக் கோரி கிராம மக்களும், சில அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். உடற்கூராய்வு முடிந்து இரண்டு தினங்களான பிறகும் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் குற்றவாளியைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இச்சூழலில், அன்னம்மாளின் மகள் புவனா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழவே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், புவனாவுக்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததும் அவர்களுடன் தொலைபேசியில் பேசிப் பழகி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, புவனாவின் ஆண் நண்பர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், புது ஆயக்குடியைச் சேர்ந்த கனகராஜ் அன்னம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.

கூலி வேலைக்குச் சென்று வரும் கனகராஜிற்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் புவனாவிடம் பழகி வந்துள்ளார். இந்த விஷயம் அன்னம்மாளுக்கு தெரிய வரவே, கனகராஜை அன்னம்மாள் எச்சரித்துள்ளார். புவனாவை தன்னுடன் சேர்த்து வைக்கக் கூறி அன்னம்மாளை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் கனகராஜ். ஆனால், அன்னம்மாள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், கனகராஜ் அன்னம்மாளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். சம்பவத்தன்று, விறகு சேகரிப்பதற்காக கண்மாய்க்கு அருகில் சென்ற அன்னம்மாளை நோட்டமிட்ட கனகராஜ் பின் தொடர்ந்து சென்று அவரை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனையடுத்து, கொலை சம்பந்தமாக கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்த பழநி தாலுகா காவல்துறையினர் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in