பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழா: நாளை வரை அனுமதிசீட்டு விநியோகம்!

பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழா: நாளை வரை அனுமதிசீட்டு விநியோகம்!

பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இணைய தளம் முலம் பதிவு செய்து குலுக்கலில் தேர்வானவர்களுக்கு அனுமதிச்சீட்டு நாளை வரை வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி பாலதண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா ஜன.27-ல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜன.18-ல் கஜபூஜையுடன் பூஜைகள் நடந்தன. இதன்தொடர்ச்சியாக கலாகர்ஜன வைபவம் இன்று நடந்தது. இங்குள்ள 89 உப சன்னதிகளில் குடமுழுக்கு புனித நீருக்கு பூஜை செய்து யாகசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று மாலை முதல் கால யாகம் தொடங்கவுள்ளது.

இதை தொடர்ந்து ஜன.27 காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் பழநி முருகன் கோயில் ராஜகோபுரம், தங்க கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனுமதிப்பது தொடர்பாக இணையத்தில் பதிய தெரிவிக்கப்பட்டது.

இதன்படி ஜன.18, 19, 20 தேதிகளில் கட்டணமில்லா பதிவு மூலம் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். இதனைடிப்படையில் குலுக்கல் முறையில் தேர்வான 2 ஆயிரம் பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சீட்டுகள் நாளை வரை வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in