
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தண்டாயுதபாணி சாமி கோயில் கும்பாபிஷேகம் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி நடத்தப்பட இருப்பதாகக் கோயில் அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட அயல் நாடுகளிலும் பழனி மலை முருகனுக்கு பக்தர்கள் அதிகம். இந்த கோயிலுக்கு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
ஜனவரி 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்.
முன்னதாக எதிர்வரும் 25-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்படுகிறது. ஜனவரி 18-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கும் என அறங்காவலர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல லட்சம் பக்தர்களை தன்வசம் கொண்டுள்ள பழனி தண்டாயுதபாணி சாமியின் கோயிலுக்கு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது