‘இந்தியாவின் ராஜதந்திரம்’ -பாகிஸ்தான் வஞ்சப் புகழாரம்!

பிலாவல் பூட்டோ சர்தாரி
பிலாவல் பூட்டோ சர்தாரி

காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளால் எங்களால் ஐ.நா கவனத்தை ஈர்க்க முடியவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் பிலாவல் பூட்டோ சர்தாரி. பாக் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான இவர், அண்மையில் இந்திய பிரதமர் மோடியை ‘குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர்’ என வர்ணித்தது சர்வதேச அளவில் சர்ச்சையானது. குஜராத் கலவர விவகாரத்தை தோண்டும் வகையில் அவர் அவ்வாறு பேசியிருந்தார்.

அடுத்தபடியாக, காஷ்மீர் விவகாரத்தை வைத்தும் இம்முறை திருவாய் திறந்திருக்கிறார். அதில் சற்றும் இயலாமையும், இந்தியாவுக்கான வஞ்சப் புகழ்ச்சியும் கலந்திருக்கிறது. ‘காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா மன்றத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றபோதெல்லாம், அதனை ராஜதந்திர சாதுர்யத்துடன் இந்தியா முறியடித்து வருகிறது’ என்று தெரிவித்திருக்கிறார் பிலாவல் பூட்டோ.

உக்ரைன் விவகாரம், மகளிர் நிலைமை என சகல சர்வதேச பிரச்சினைகள் குறித்தான விவாதங்கள் ஐ.நா-வில் அலசப்படும்போதெல்லாம், சற்றும் தொடர்பின்றி காஷ்மீர் விவகாரத்தை பேசி கவனம் ஈர்க்க பிலாவல் பூட்டோ முயன்றிருக்கிறார். அப்போதெல்லாம் இந்தியா தரப்பில் கடுமையான பதிலடிகள் தரப்பட்டதில் அந்த விவகாரம் நீர்க்க வாய்ப்பானது.

பாகிஸ்தான் தேசத்தின் பொருளாதாரம் மிகவும் நசிந்த நிலையில் திவால் ஊசலாட்டத்தில் சிக்கியபோதும், காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவுக்கு எதிரான சர்வதேச அரசியலில் பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது. இதன் மூலம் தங்களது உள்நாட்டுப் பிரச்சினைகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் நாட்டின் உள்ளேயும், வெளியேயும் மடைமாற்றவும் தொடர்ந்து முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in