மீளும் தேசத்தை முடக்க முயலும் தீவிரவாதத் திட்டங்கள்

இந்திய நகரங்களைக் குறிவைக்கும் தொடர் நாசகாரம்
மீளும் தேசத்தை முடக்க முயலும் தீவிரவாதத் திட்டங்கள்

நெருங்கும் பண்டிகைகளை முன்னிட்டு, நாடு முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளுக்கான நாசகாரத் திட்டத்துடன் இந்திய நகரங்களில் பதுங்கியுள்ள பயங்கரவாத ஸ்லீப்பர் செல்களை போலீஸார் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்பினர் துழாவி வருகின்றனர்.

ஆப்கனில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதைத் தங்களுக்கான நல்வாய்ப்பாக வரவேற்ற பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் தீவிரவாதிகள், ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் புதிய திட்டங்கள், எல்லை வழி ட்ரோன்கள் தூவிச் செல்லும் ஆயுதங்கள், கடல்வழியாகக் கைப்பற்றப்படும் டன் கணக்கிலான போதைப் பொருட்கள், மாவோயிஸ்ட் குழுக்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேக நபர்கள், நாடெங்கும் கண் விழித்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள்... இப்படிச் சிதறிக்கிடக்கும் புள்ளிகள் அனைத்தையும் இணைத்தால், இந்தியாவுக்குக் காத்திருக்கும் அச்சுறுத்தல் புரியும்.

ஆறுதலும் அச்சுறுத்தலும்

பெருந்தொற்றுப் பரவலின் இரு பேரலைகளில் முடங்கிக்கிடந்த தொழில் துறை, இப்போதுதான் சோம்பல் முறித்து செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. நெருங்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சந்தையின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் முனைப்பில் இதர துறைகளும் எழுந்து ஓட ஆரம்பித்திருக்கின்றன. தனிநபர் பணப்புழக்கம் முதல் தேசத்தின் பொருளாதாரம் வரை இவை ஆரோக்கிய மாற்றத்துக்கான அறிகுறிகள். இந்தச் சாமானிய மக்கள் மத்தியிலிருந்து, இதே பண்டிகைக்காகக் காத்திருக்கும் பயங்கரவாதிகளே தற்போதைய அச்சத்துக்குக் காரணம்.

நாசகாரத் திட்டங்கள் பலவற்றுடன் இந்த அமைப்புகள் இந்தியாவின் பெருநகரங்களைக் குறிவைத்திருந்தது, அண்மை கைதுகள் சிலவற்றில் வெளிப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட, இலங்கையில் 2019-ல் நடந்த ’கருப்பு வெள்ளி’ தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணிக்கு நிகரான திட்டமிடல்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன.

ஆப்கன் - பாகிஸ்தான் - காஷ்மீர்

ஆயுதமுனையில் ஆப்கானிஸ்தானின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோது, காஷ்மீரின் எல்லையோரம் சோர்ந்திருந்த தீவிரவாதக் கும்பல்கள் உற்சாகம் பெற்றன. தங்களது காஷ்மீர் களப்பணிக்கு ஆதரவளிக்குமாறு வெளிப்படையாகவே தாலிபான்களிடம் கேட்டுக்கொண்டன. ஏற்கெனவே பாகிஸ்தானைப் புகலிடமாகக் கொண்டு அந்நாட்டின் அதிகாரபூர்வ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் ஆசிகளுடன் வளர்ந்திருக்கும் தீவிரவாதக் குழுக்கள், புதிய தாலிபான் எழுச்சி மூலம் தனியான ‘தார்மிக’ பலம் பெற்றுள்ளனர். அதன்படி அடங்கியிருந்த இவர்களின் எல்லையோர வாலாட்டல்கள் அதிகரித்தன. புதிய திட்டங்களின் அடிப்படையில், காஷ்மீர் சிறுபான்மையினரான இந்து மற்றும் சீக்கியரைக் குறிவைத்து தாக்குதல்கள் தொடங்கின. கடந்த இரு நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையிலான 5 ஆயுத மோதல்களில், 5 ராணுவத்தினரும் 7 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

உறக்கம் கலைந்த ஸ்லீப்பர் செல்கள்

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியை ஆராய களமிறங்கிய தேசிய பாதுகாப்பு முகமைக்கு(என்.ஐ.ஏ) கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நாடு முழுக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதுங்கிக்கிடக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய பகீர் தகவல்கள் தெரியவந்தன. இவர்கள் அனைவரும் ஸ்லீப்பர் செல்கள் என்பதால், அவர்களை வளைப்பதில் தடுமாற்றமும் நீடித்தது. அப்படியான விசாரணைப் பொறியில், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவால் முகமது அஷ்ரஃப் என்ற பாகிஸ்தானி வளைக்கப்பட்டிருக்கிறார். லட்சுமி நகரில் பிடிபட்டிருக்கும் இவர், இந்தியாவில் பதுங்கியிருக்கும் ஸ்லீப்பர் செல்களின் தலைவர்களில் ஒருவர் என அறியப்படுகிறார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்து 10-ம் வகுப்பு வரை படித்த அஷ்ரஃப் உள்ளூர், இந்திய எதிர்ப்பு தீவிரவாதக் குழுக்களால் ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளிடம் அனுப்பப்பட்டிருக்கிறார். அங்கு முறையான பயிற்சி பெற்ற அஷ்ரஃப், வங்கதேச எல்லையில் உள்ள சிலிகுரி வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார். நேராக ராஜஸ்தானின் அஜ்மீர் மௌல்வி ஒருவரைச் சென்று சந்தித்திருக்கிறார். அவரது சிபாரிசின் பேரில், தனது டெல்லி அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.

முகமது அஷ்ரஃப்
முகமது அஷ்ரஃப்

பண்டிகைக்கான குண்டுகள்

அலி அகமது நூரி என்ற போலி அடையாளத்துடன் கடந்த சில வருடங்களாக டெல்லியில் புழங்கி வந்த அஷ்ரஃப், அதற்கு முன்னதாக வெவ்வேறு ஊர்களில் வேறு பல அடையாளங்களில் தங்கி இருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக இப்படியான ‘சேவை’யை தொடர்ந்திருக்கும் அஷ்ரஃபின் பிரதான பணி, இந்திய ஸ்லீப்பர் செல்களை ஒருங்கிணைப்பது. அஷ்ரப் வசமிருந்து ஏகே 47, நவீன சீன பிஸ்டல்கள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்படிப் பலரிடம் பிரித்து பதுக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் தேவையைப் பொறுத்து ஓரிடத்துக்குக் கொண்டுசெல்லப்படும். தஸரா, தீபாவளி என கிறிஸ்துமஸ் வரை இந்தியாவில் தொடரும் பண்டிகைகளை குறிவைத்து மதத் தலங்கள், மக்கள் கூடுமிடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெரும் சேதத்தை விளைவிக்கும் சங்கிலித் தொடர் தாக்குதலை நிகழ்த்துவதே இவர்களின் திட்டம். உயிர்ச்சேதமும் அதன் மூலமாக பொது அமைதியை குலைத்துப் பரவும் பீதியும் இவர்களின் நோக்கங்கள்.

சோட்டா வாலித் எங்கே?

டெல்லியின் முகமது அஷ்ரஃப் போலவே, ஜம்மு காஷ்மீரில் ’சோட்டா வாலித்’ என்பவரைப் பாதுகாப்புப் படைகள் தேடிவருகின்றன. அஷ்ரஃபுக்கு சீனியரான சோட்டா வாலித், இந்தியாவில் ஊடுருவி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சோட்டா வாலித் என்பது உள்ளூர் தீவிரவாத குழுக்கள் மத்தியில் குறிப்பிடப்படும் அடையாளம் மட்டுமே. வாலித்தின் நிஜ அடையாளம் எவரும் அறியாதது. கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாதச் செயல்களுக்கு மூளையாக இந்த சோட்டா வாலித் அறியப்படுகிறார்.

ஜம்மு காஷ்மீரின் உள்ளூர் தீவிரவாதிகளை ஒருங்கிணைப்பது, புதிதாக ஆள் சேர்ப்பது, ஆயுதங்கள் தருவிப்பது, தீவிரவாத திட்டங்களை செப்பனிட்டு தருவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். காஷ்மீர் சிறுபான்மையினரை குறிவைத்துக் கொல்வது, 90-களின் போதான மக்கள் பிரிவினையை ஊக்குவிப்பது ஆகியவை வாலித் வழிவந்த வியூகங்கள். கடந்த சில வாரங்களாக, 5-க்கும் மேற்பட்ட தீவிரவாத சிறு குழுக்கள் காஷ்மீரை குறிவைத்து எல்லை தாண்டியிருப்பதையும் அவர்களுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டலுக்காக சோட்டா வாலித் உடன் சங்கமித்திருப்பதாகவும் பாதுகாப்புப் படையினர் கருதுகின்றனர்.

கண்விழித்த நிழலுலகம்

முன்னதாக செப்டம்பர் மத்தியில், டெல்லியில் கைதான 6 தீவிரவாதிகளுடனான அஷ்ரப்பின் பின்னணி குறித்தும் டெல்லி போலீஸ் விசாரித்துவருகிறது. தாவூத் இப்ராஹிம் தம்பியான அனீஸ் இப்ராஹிமுடன் தொடர்புடையை சமீர் என்ற நபரின் கையும் இந்த நெட்வொர்க்கில் உள்ளது என, புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நிழலுலகக் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் இந்த சமீர். இந்தியாவுக்குள் கொண்டுவரப்படும் போதைப் பொருள் கச்சாவை, இந்த நிழலுலகத்தினர் தரம்பிரித்து சந்தையில் புழங்கவிடுகிறார்கள். இதன் மூலம் தங்களது சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கான பணப்புழக்கத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். கைதான 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் பண்டிகையைக் குறிவைத்த குண்டுவெடிப்புத் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தீவிரவாதிகள் மத்தியில் ஆயுத உற்பத்தி குடிசைத் தொழில்போல பரவியுள்ளது. வீட்டில் வைத்தே தயாரிக்கும் ஐ.ஈ.டி ரக வெடிகுண்டுகளைக் கொண்டு, இந்த நாசவேலைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்.

மாவோயிஸ்ட் மத்தியிலும் அதிரடி சோதனை

தமிழகம், கர்நாடகம், கேரளம் என 3 மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தாரை குறிவைத்து என்.ஐ.ஏ நேற்று(அக்.12) திடீர் சோதனை மேற்கொண்டது. இந்த 3 மாநிலங்களையும் இணைக்கும் வனப்பகுதியில் அண்மைக் காலமாக மாவோயிஸ்ட் அமைப்புகளின் பயிற்சிகள் மற்றும் சந்திப்புகள் அதிகரித்துள்ளன. கரோனா காலத்தின் அவகாசம் மற்றும் பரவலான வேலையிழப்பு ஆகியவற்றால் பிரச்சார நுட்பத்தில், புதிதாக ஆள் சேர்க்கும் பணியிலும் இந்த அமைப்புகள் ஈடுபட்டன என்கிறார்கள்.

மேலும் தடைசெய்யப்பட்ட இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படும் சில குறுங்குழுக்கள், தீவிரவாத அமைப்புகள் சிலவற்றுடன் தொடர்புகொண்டிருப்பதாகவும், வனப்பகுதிகளின் ஆயுத முகாம்களில் மாவோயிஸ்ட் அல்லாத சிலர் பயிற்சி பெற்றதாகவும் கிடைத்த தகவல்களும் இந்த ரெய்டுக்கான காரணமாகச் சொல்லப்படுகின்றன. ஒரேநாளில் தமிழகத்தின் 7 இடங்கள் உட்பட 3 மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில், சந்தேகத்துக்கு உரியோர் மற்றும் முன்னாள் மாவோயிஸ்டுகள் மத்தியில் ரெய்டு நடத்தி, டிஜிட்டல் ஆதாரங்களை என்.ஐ.ஏ சேகரித்துள்ளது.

தேவை திடமான நடவடிக்கை

கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் செவ்வாயன்று கூடிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “பருவநிலை மாற்றம் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து செயல்படுவது போன்று, எல்லைகடந்த தீவிரவாதத்தைத் தடுப்பதிலும் ஒன்றிணைய வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார். உள்நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, இம்மாதிரி ராஜதந்திர நகர்வுகளும் இப்போதைக்கு அவசியமாகின்றன.

ஜம்முவில் தொடங்கி தமிழகம்வரை அண்டை நாடுகளின் உபயத்தில் அதிகரிக்கும் தீவிரவாதம், ஒரு வளரும் தேசத்துக்குப் பெரும் வேகத்தடையாகவே வழியெங்கும் வளர்ந்து நிற்கின்றது. இந்தத் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாங்கமும், என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளும் சில தினங்கள் பரபரப்பைக் கூட்டுவதோடு காணாமல் போகின்றன. மேலும் சில தருணங்களில், இந்தப் பரபரப்புகள் நாட்டின் அப்போதைக்கான அரசியல் சச்சரவை மடைதிருப்புவதற்கான உத்திகள் என்பதற்கு அப்பால், உருப்படியாய் எதையும் பெயர்ப்பதில்லை. அரசியல் சாயலற்ற தொலைநோக்கிலான ஏற்பாடுகளே, தீவிரவாதம் மட்டுமன்றி இதர இடையூறுகளையும் திடத்துடன் தேசம் எதிர்கொள்ள உதவும்.

Related Stories

No stories found.