2017-ல் புகார்... 2022-ல் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: சரபோஜி-சிவாஜி மன்னர்கள் ஓவியத்தை மீட்க தமிழக போலீஸ் தீவிரம்

2017-ல் புகார்... 2022-ல் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: சரபோஜி-சிவாஜி மன்னர்கள் ஓவியத்தை மீட்க தமிழக போலீஸ் தீவிரம்

தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் இருந்து திருடப்பட்ட சரபோஜி- சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் ஓவியம் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை இந்தியா கொண்டுவர சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் 1822-1827-ம் ஆண்டு காலகட்டத்தில் வரைந்து வைத்திருந்த சரபோஜி - சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் ஓவியம் திருடு போனதாகவும், அதனை கண்டுபிடிக்குமாறும் கடந்த 2017-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடத்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஓவியம் தொடர்பான தகவல்கள் குறித்து பிற நாட்டில் உள்ள பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும், அருங்காட்சியகங்களிலும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஓவியம் குறித்து கேட்டு வந்தனர்.

இந்த முயற்சியில் தொன்மையான சரபோஜி - சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் ஓவியம் அமெரிக்காவில் உள்ள PEM என்ற அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டதும், பின் முறையான ஆவணங்கள் இல்லாததால் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் ஹோம்லாண்ட் செக்யூரிட்டி மூலம் பறிமுதல் செய்யப்பட்டதும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தெரியவந்தது. குறிப்பாக கடந்த 2006-ம் ஆண்டு பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் போலியான ஆவணங்கள் கொடுத்து அமெரிக்காவில் உள்ள PEM அருங்காட்சியகத்தில் அந்த ஓவியத்தை 35 ஆயிரம் டாலருக்கு விற்றதும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே தொன்மையான அந்த ஓவியம் அமெரிக்காவின் ஹோம்லாண்ட் செக்யூரிட்டியால் பறிமுதல் செய்யப்பட்டும், 2015-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து அந்த ஓவியத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், 2017-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரால் தற்போது இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த ஓவியத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே கடந்த ஜூலை 1-ம் தேதி சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட, முதல் முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "புதிய ஏற்பாடு" பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்து அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in