ரத்தத்தில் ஓவியம் வரைவதால் நோய் பரவும் அபாயம்: எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ரத்தத்தில் ஓவியம் வரைவதால் நோய் பரவும் அபாயம்:  எச்சரிக்கும் அமைச்சர்  மா.சுப்பிரமணியன்

ரத்தத்தை எடுத்து அதில் விருப்பமானவர்களுக்கு ஓவியம் வரைந்து அனுப்புவது சரியானது அல்ல. அதனை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று இளைஞர்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சி நாளை வருவதை முன்னிட்டு ஒருநாள்  முன்னதாகவே இன்று திருச்சிக்கு தமிழக  சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் கரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே கடந்த 24-ம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடைபெற்ற வருகிறது.

சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு நேற்று வந்த பயணிக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய ரத்த மாதிரிகள் இன்று சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு அது எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து ஆராயப்படுகிறது. 

சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் கம்போடியாவில் இருந்து ஒருவரும் , துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர். அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

தற்போது ரத்ததில் ஓவியம் வரைந்து விருப்பமானவர்களுக்கு அனுப்பும் 'ஃப்ளட் ஆர்ட்; எனும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இது சரியானது அல்ல.  ரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து அதை விரும்பியவர்களுக்கு அனுப்புவதை  ஒரு தொழிலாகவே பலர்  செய்து வருக்கின்றனர்.

இதுபோன்ற கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். சென்னையில் ஃபிளட் ஆர்ட் நிறுவனங்களை சோதனை செய்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுகாதாரச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்பு, நட்பு, காதல் மூன்றையும் பகிர்ந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ள நிலையில் அதற்கு ரத்த ஓவியங்கள் தான் அதற்கான வழி என்று கூறுவது தவறு.  ஒருவரது உடலிலிருந்து ரத்தத்தை எடுப்பது மருத்துவத் துறையினரது வேலை. ரத்தம் என்பது மிக அத்தியாவசியமான ஒன்று. அதை ஓவியம் போன்றவற்றிற்கு பயன்படுத்தக்கூடாது.தவிர ஒருவரது உடலிலிருந்து முறையற்ற முறையில் எடுக்கப்படும் ரத்தம் மூலம் நோய் பரவும் சூழலும் ஏற்படும்.

இன்று முதல் அந்த பணிகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. ஓவிய பணியை நிறுத்தாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.இளைஞர்கள் இத்தகைய விஷயங்களில் ஆர்வம் கொள்ளக்கூடாது"  என அவர்  கேட்டுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in