நடுரோட்டில் நெல் வியாபாரி டூவீலரோடு எரித்துக் கொலை?: புதுவையில் நள்ளிரவில் நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம்

வேணுகோபால்
வேணுகோபால்

பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நெல் வியாபாரி தனது இரு சக்கர வாகனத்தோடு சேர்ந்து எரிந்த சோக சம்பவம் புதுவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (65). நெல் வியாபாரியான இவர் தவளைக்குப்பம் பகுதியில் அலுவலகம் வைத்திருந்தார். நேற்று இரவு 10 மணி வரை தனது அலுவலகத்தில் இருந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த வேணுகோபால் அதன் பின்னர் அலுவலகத்தை மூடி விட்டு விட்டுக்குச் சென்றார்.

தவளகுப்பத்திலிருந்து வீட்டிற்கு செல்லும்போது அபிஷேகபாக்கம் பகுதியில் உள்ள சமாதி பேருந்து நிலையம் அருகே அவரது இருசக்கர வாகனமும், அதில் சென்று கொண்டிருந்த அவரும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீப்பிடித்து எரியும் வேணுகோபால், மற்றும் வாகனம்
தீப்பிடித்து எரியும் வேணுகோபால், மற்றும் வாகனம்

விரைந்து வந்த தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர் ஆனால் அதற்குள் வேணுகோபால் முற்றிலுமாக எரிந்து சாம்பலானார். அவரது இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து உருக்குலைந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தவளகுப்பம் போலீசார் வேணுகோபாலின் வாகனத்தில் தீப்பிடித்தது எவ்வாறு என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீக்கிரம் வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு தனது மகனுக்கு வேணுகோபால் அலைபேசியில் தகவல் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் வேணுகோபால் பணத்துடன் செல்வதை நோட்டமிட்ட சமூக விரோதிகள் யாராவது அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு அவரை கொலை செய்து எரித்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது குடும்பத்தினரும் இது கொலைதான் என்று திட்டவட்டமாக காவல்துறையிடம் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in