27 ஆண்டுகள் சிறை; 171 கோடி அபராதம்: 930 கோடி சுருட்டிய நிதி நிறுவன அதிபர், பெண்ணுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு

27 ஆண்டுகள் சிறை; 171 கோடி அபராதம்: 930 கோடி சுருட்டிய நிதி நிறுவன அதிபர், பெண்ணுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு

பாசி டிரேடிங் நிதி நிறுவன மோசடி வழக்கில் அதன் நிறுவனர் மற்றும் பங்குதாரருக்கு தலா 27 ஆண்டு சிறைத் தண்டனையும், 171 கோடி அபராதமும் விதித்து தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ல் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து 930 கோடி வசூலித்து மோசடி செய்தது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சிபிஐ கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

9 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், அரசு மற்றும் எதிர்தரப்பு சாட்சியம், இருதரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து ஆகஸ்ட் 22-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி கடந்த 11-ம் தேதி அறிவித்தார். இதனிடையே, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க உள்ளதால் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவி, வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரவி, பாசி டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், பங்குதாரர் கமலவள்ளி ஆகியோர் குற்றவாளி என அறிவித்ததோடு, இருவருக்கும் தலா 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 171.74 கோடி அபராதமும் விதித்து அதிரடி காட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in