
கஞ்சா விற்பதை காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவர் அதே தெருவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு கடையை அடைக்கும் நேரத்தில் சாலியர் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் வாளுடன் தங்கராஜ் கடைக்கு வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் கடையின் முகப்பில் இனிப்பு, காரங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்களை சரமாரியாக வாளால் வெட்டினார். இதில் கண்ணாடி பாட்டில்கள் நொறுங்கின. மேலும் கடையை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களையும் வாளால் மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்ததில், வாலிபர் ஒருவர் வாளை கொண்டு கடையில் உள்ள பொருட்களை உடைத்து நொறுக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீஸார் விசாரணை நடத்தியதில், வாளால் கடையை சேதப்படுத்திய வாலிபர் டவுன் அடைக்கலமாதா தெருவை சேர்ந்த மாதவன் (25) என்பது தெரியவந்தது.
இவர் மீது கஞ்சா உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாதவன் கஞ்சா விற்பதாக தங்கராஜ் தரப்பினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதனை அறிந்த மாதவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி மாதவனை தேடி வருகின்றனர்.