68 பேரில் 3 பேரே தமிழர்கள்: பொன்மலை ரயில்வே பணிமனையை ஆக்கிரமிக்கும் வட மாநிலத்தவர்கள்!

68 பேரில் 3 பேரே தமிழர்கள்: பொன்மலை ரயில்வே பணிமனையை ஆக்கிரமிக்கும் வட மாநிலத்தவர்கள்!

பொன்மலை ரயில்வே  பணிமனையில் தற்போது  பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  68 பேர்களில்  65 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தமிழகத்தில் ரயில்வே வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அளவில் மிக  முக்கியத்துவம் பெற்றதாக விளங்கும்  திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில்   கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 8,000 பேர் பணியாற்றி வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர்  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.  அது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு  தற்போது மொத்தம்  3,500 பேர் பணியாற்றிவரும் நிலையில் அவர்களில்  வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை சரிபாதியாக 1,500 ஆக உள்ளது.

இந்த நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ஆர்பி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்டு  பொன்மலை பணிமனைக்கு வேலைக்கு வந்திருக்கும்  68 பேரில்  65 நபர்கள் ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட  வட மாநிலத்தவர்கள். மீதமுள்ள மூன்று நபர்கள் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அது தமிழகத்தில் ரயில்வே பணிக்காக காத்திருப்பவர்களின் மத்தியில்  புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அப்ரண்டீஸ் முடித்து 15 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் முன்னாள் ரயில்வே ஊழியர்களின் வாரிசுகள் மற்றும் தமிழக இளைஞர்கள் இது குறித்து மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். "எங்களது வேலை வாய்ப்பை வட மாநிலத்தவர்கள் தட்டிப் பறிப்பதால், நன்கு படித்திருந்தும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுச் செய்தும், பொன்மலை  ரயில்வே பணிமனையில் அப்ரண்டீஸ் முடித்திருந்தும் வேலையில்லாமல் திரிய வேண்டிய அவல நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் "தமிழகத்தில் அனைத்து திட்டங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் மத்திய அரசு பின்னோக்கி கொண்டு செல்கிறது. சொந்தத் தாயகத்திலேயே வேலைக்குத் தகுதியுள்ள தமிழர்கள் அகதிகள் போல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். மண்ணின் மக்களுக்கு வேலையை உறுதி செய்யும் சட்டங்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இருக்கின்றன. 

அதுபோல தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு  வேலை உறுதியளிக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்"  என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in