'எங்கள் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுகிறார்கள்’ - டெல்லியில் மீண்டும் கடுமையாக மோசமானது காற்றின் தரம்

'எங்கள் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுகிறார்கள்’ - டெல்லியில் மீண்டும் கடுமையாக மோசமானது காற்றின் தரம்

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை அடர்த்தியான புகை மூட்டம் நீடித்தது. காற்றின் தரம் மோசமானதன் காரணமாக பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் அண்டை மாநிலங்களில் வயல்களில் எரிக்கப்படும் வைக்கோல் புகை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் காரணமாக, இன்று காலை 7 மணிக்கு டெல்லியில் காற்றின் தரக் குறியீடு AQI 408 ஆக இருந்தது. இது தவிர மோசமான வானிலையும் காற்றின் தரம் மோசமடைய மற்றொரு காரணம்.

டெல்லியில் நச்சுக் காற்றை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், பல பொதுமக்கள் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாகப் புகாரளித்துள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும் காலை நேரங்களில் நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது, அவர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

காற்றின் தரம் மேம்படும் வரை பள்ளிகளை மூடுமாறு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.

ஆனாலும், பள்ளிகளை மூடுவதை விட மாசு அளவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நீண்டகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். "எங்கள் குழந்தைகள் சுவாசிக்க சிரமப்பட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் அரசாங்கம் பள்ளிகளை மூடக்கூடாது. காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நெருக்கடியின்போது பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஒரு குழந்தையின் பெற்றோர் கூறினார்.

நகரின் 24 மணி நேர AQI நேற்று 376 ஆக இருந்தது, செவ்வாய்கிழமை அது 424 ஆக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி காற்றின் தரம் ஏகியூஅய் 459 ஆக இருந்ததுதான், மிக மோசமான நிலையாகும்.

401 மற்றும் 500 க்கு இடையில் உள்ள AQI அளவு மிகவும் கடுமையானது. பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட AQI அளவு "நல்ல நிலை", 51 மற்றும் 100 இடையில் உள்ள நிலை"திருப்திகரமானது", 101 மற்றும் 200 வரை உள்ள நிலை "மிதமானது", 201 மற்றும் 300 "மோசமானது", 301 மற்றும் 400க்கும் இடையில் உள்ள நிலை "மிகவும் மோசமானது" எனக் கருதப்படுகிறது.

நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த காலகட்டத்தில் அண்டை மாநிலங்களில் உள்ள வயல்களில் அதிகளவில் புல் எரிக்கப்படுகிறது.

டெல்லில் நகரில் காற்றில் உள்ள நுரையீரலை சேதப்படுத்தும் சிறிய PM 2.5 மாசுக்களில் 32 சதவீதம் வரை பண்ணை தீயில் இருந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அக்டோபர் நடுப்பகுதி முதல் நவம்பர் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் இது மிக அதிகமாக உள்ளது என்று அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. PM 2.5 என்பது 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான அளவு கொண்ட நுண்ணிய துகள்கள் ஆகும். இது சுவாசக் குழாயில் ஆழமாகப் பயணித்து, நுரையீரலை அடைந்து இரத்த ஓட்டத்தில் நுழைந்து நுரையீரல் செயல்பாட்டை மோசமாக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in