எங்களது உடலை அப்பா, கணவரிடம் ஒப்படைக்கக் கூடாது:மகனுடன் தற்கொலை செய்த பெண் அதிர்ச்சி கடிதம்

எங்களது உடலை அப்பா, கணவரிடம் ஒப்படைக்கக் கூடாது:மகனுடன் தற்கொலை செய்த பெண் அதிர்ச்சி கடிதம்

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகனுடன், சேர்ந்து தற்கொலை செய்த இளம்பெண் கடிதத்தால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி, பெத்தகோன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி (36). ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரானந்தம் (42). இவர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீஹரி(8) என்ற மகன் இருந்தார். வீரானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ஜெயபாரதி, ஸ்ரீஹரி ஆகிய இருவரும் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஜெயபாரதியின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொன்னமராவதி போலீஸார், ஜெயபாரதியின் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது தாய், மகன் இருவரும் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் வீரானந்தத்திற்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் ஜெயபாரதி எழுதிய கடிதத்தை போலீஸார் வீட்டில் இருந்து கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், "எங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. குடும்ப நிலை, உடல்நிலை, மன அழுத்தத்தால் இம்முடிவை எடுக்கிறேன். எங்களது உடலை அப்பா, கணவரிடம் ஒப்படைக்கக் கூடாது. நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக கணவர் எங்களுக்கு என எதுவும் செய்தது கிடையாது. எனது மகனுக்கு தந்தையாகவும், எனக்கு கணவராகவும் அவர் இருந்தது கிடையாது. மகனிடம் அப்பாவுடன் செல் எனக் கூறினேன். அவனோ இருந்தால் உன்னுடன் இருக்கிறேன். இல்லையென்றால் வேண்டாம் என்று கூறி விஷத்தை என்னுடன் சேர்ந்து குடித்துவிட்டான். இவ்வீட்டில் இருந்து குண்டூசி கூட கணவருக்கோ, அப்பாவுக்கோ கொடுக்கக் கூடாது" என்று எழுதியுள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in