ஹிஜாப்பை கழற்ற எதிர்ப்பு!- முதல் நாளே கல்லூரி மாணவிகள் போராட்டம்

ஹிஜாப்பை கழற்ற எதிர்ப்பு!- முதல் நாளே கல்லூரி மாணவிகள் போராட்டம்

விடுமுறைக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஹிஜாப்புடன் வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்க பேராசிரியர்கள் மறுத்ததால் மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கல்வி நிறுவனங்களுக்கு மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து, கடந்த 14ம் தேதி 9 மற்றும் 10ம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. தும்கூர், விஜயபுரா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து கொண்டு இஸ்லாமிய மாணவிகள் வருகை தந்தனர். பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியும் ஹிஜாபை அகற்ற மறுத்த அவர்கள், போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் ``எங்களுக்கு நீதி வேண்டும்’ என்ற கோஷங்களை எழுப்பி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜயபுராவில் கல்லூரி ஒன்றில் ஹிஜாபுடன் வகுப்புக்கு சென்று அமர்ந்து கொண்ட மாணவிகள் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில கல்லூரிகளுக்கும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து வந்ததால் அவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கர்நாடகாவின் ஒரு சில கல்லூரிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் பல இடங்களில் இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவில்லை. போராட்டங்களை தடுக்க கர்நாடகாவில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in