கேரளத்தின் டிஜிட்டல் ரீசர்வேக்கு சொந்த மாநிலத்திலேயே எதிர்ப்பு: என்ன செய்யப் போகிறார் பினராயி விஜயன்?

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடதுசாரி அரசு, டிஜிட்டல் ரீசர்வே பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது. இதில் தமிழகப் பகுதிகளையும் கேரளம் கபளீகரம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ் பகுதிகளை ஒட்டிய கேரள எல்லைகளில் எதிர்ப்பு வலுத்துவந்தது. இந்நிலையில் ரீ சர்வேவிற்கு கேரள மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சியும் கையில் எடுத்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள ஒருகிலோ மீட்டர் தாங்கல் மண்டலங்களில் ஆய்வு செய்ய கேரள இடது சாரி அரசு கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே நேர விரயம் செய்து வருகிறது. இதேபோல செயற்கைகோள் மூலம் அவர்கள் செய்யும் ஆய்வும் துல்லியமற்றது என கேரள மக்களே குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளனர்.

கேரள எதிர்கட்சித் தலைவர் சுதீசன், “கிராமப்பகுதிகளில் ஏராளமான புதிய கட்டுமானங்கள் நடந்துள்ளன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் செயற்கைக்கோள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. இப்போது இந்த செயற்கைக்கோள் ஆய்வு முடிவுகளுடன் சமர்பித்தால் அது மாநில மக்களின் நலனுக்கே கேடாக முடிந்துவிடும். செயற்கைக்கோள் ஆய்வை கைவிட்டு நேரடியாக அலுவலர்களை வைத்து ஆய்வுசெய்ய வேண்டும்” என்றார்.

இந்த எதிர்ப்பினைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து இருக்கும் வனத்துறை அமைச்சர் சுசீந்திரன், “இந்த அறிக்கை உச்சநீதிமன்றத்திலோ, மத்திய அரசிலோ இப்போதைய வடிவத்தில் வைக்கப்படாது. அவர்கள் முன் வைப்பதற்கு விரிவான அறிக்கையை வெளியிட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்துத் துறைகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் உச்சநீதிமன்றம் பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களை சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்துதான் அந்தப் பணியைச் செய்தோம். எதிர்கட்சித் தலைவரின் கருத்தை வரவேற்கிறோம். பரிசீலிப்போம்” என்றார்.

ஏற்கனவே கேரளத்தில் மேற்கொள்ளப்படும் செயற்கைகோள் சர்வேக்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், தமிழகத்தை ஒட்டிய கேரளப் பகுதிகளிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில் சொந்த மாநிலத்திலேயே இதற்கு எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. இதனால் இதை பினராயி விஜயன் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்னும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in