மாநில காவல் துறையின் அதிகாரத்தைப் பறிக்கும்: சென்னையில் என்ஐஏ காவல் நிலையத்திற்கு கிளம்பும் எதிர்ப்பு

மாநில காவல் துறையின் அதிகாரத்தைப் பறிக்கும்: சென்னையில் என்ஐஏ காவல் நிலையத்திற்கு கிளம்பும் எதிர்ப்பு

சென்னை புரசைவாக்கத்தில் செயல்படும்   என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு காவல் நிலையம் அந்தஸ்து வழங்கப்படுகிறது என்று  வெளியாகியிருக்கும் தகவல்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகத்தைக் காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், தேசிய புலனாய்வு அமைப்பின் சென்னை கிளை தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்குகளை விசாரிக்கும் எனவும் உள்துறை செயலாளரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்காலத்தின் அபாயத்தை கருத்தில் கொள்ளாமல், இது போன்ற அனுமதி வழங்கியுள்ளதாக பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காவல் நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு முகமை எது குறித்தும்,  யார் மீதும் உடனடியாக எஃப்ஐஆர் பதிவு  செய்ய முடியும்.   அதன் நிர்வாக எல்லை, தமிழ்நாடு முழுக்க விரியும் அபாயமும் உண்டு. பாஜகவின் மதவாத அரசியலுக்கு உடந்தையாக தேசிய புலனாய்வு முகமை செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதன்  அச்சுறுத்தலும் அராஜகங்களும் மேலும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் நடைபெறும் எந்த வழக்கிலும் உள்ளே நுழைந்து தீவிரவாத முத்திரை குத்தி மாநில காவல்துறையின் அதிகாரத்தைப் பறித்தெடுக்கும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இது போன்ற அபாயகரமான செயல்கள் ஒரு சில மதங்களுக்கு எதிராக மட்டுமல்ல, எந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படக் கூடிய அபாயமும் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு இது குறித்து  தனது ட்விட்டர்  பக்கத்தில், "தேசியப் புலனாய்வு முகமைக்கு காவல் நிலையம் அந்தஸ்து வழங்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in