மகாராஷ்டிரத்தில் மீண்டும் மலர்கிறதா தாமரை?

ஆரம்பமானது ‘ஆபரேஷன் லோட்டஸ்’!
மகாராஷ்டிரத்தில் மீண்டும் மலர்கிறதா தாமரை?

கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்களுடனான பேச்சுவார்த்தையில் சிவசேனா தோல்வியடைந்துள்ளதால், மகாராஷ்டிரத்தின் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு ஆபத்து நேர்ந்துள்ளது.

தனது பிரத்யேக ‘ஆபரேஷன் லோட்டஸ்’ உத்தி பலித்தால் அங்கு மறுபடியும் ஆட்சியமைக்கும் யோகத்துக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறது பாஜக. இந்த ஆபரேஷன் ஏடாகூடமானால், ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமையவும் வாய்ப்பு உள்ளது. பாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக மாறும் மகாராஷ்டிரத்தின் அரசியல் காட்சிகள் தேசம் நெடுக கவனம் ஈர்த்துள்ளது.

திங்களன்று (ஜூன் 20) மாநில சட்ட மேலவை தேர்தலில் மாகாராஷ்டிராவுக்கான நடப்பு களேபர அத்தியாயம் தொடங்கியது. அரசியல் கட்சிகளின் கணிப்புகளை மீறி 5 பாஜகவினர் எம்எல்சி-ஆக தேர்வானார்கள். இதற்கு ஆளும் சிவசேனாவின் சில எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்ததே காரணம் என தெரியவந்ததும் அக்கட்சிக்குள் அமளிதுமளியானது. கட்சி மாறி வாக்களித்ததாக சுமார் 11 எம்எல்ஏ-க்கள் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர்கள் உட்பட 20-க்கும் மேலான சிவசேனா எம்எல்ஏ-க்கள் குஜராத்தில் அடைக்கலமானார்கள். அவர்கள் சிவசேனையின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சூரத் நகரின் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அரசியல் வாரிசாகவும் வளர்ந்து வரும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடனான பூசலில் உழன்று வந்த ஏக்நாத் ஷிண்டே, இந்த களேபரச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். பாஜகவுடனான மறைமுக ஒப்பந்தத்தில், 2 நாட்களாக அதிரடி காட்சிகளை அரங்கேற்றி வருகிறார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா சகாக்களின் தூது எதற்கும் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மசியவில்லை. உத்தவ் தாக்கரே சார்பில் சூரத் சென்றவர்களும் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். பொறுமையிழந்த சிவசேனாவின் மற்றொரு மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ”பாஜகவின் அமலாக்கத்துறை மிரட்டலுக்கு அஞ்சி கட்சியை உடைக்கப்பார்க்கிறார் ஏக்நாத் ஷிண்டே” என்று குமுறி உள்ளார். ஏக்நாத்தோ, ”நாங்கள் என்றும் பால்தாக்கரே கொள்கைகளின் வழி நிற்போம்” என்று தங்களை நிஜமான சிவசேனாவாக நிறுவப் பார்க்கிறார். நேற்று மாலை (ஜூன் 21) உத்தவ் தாக்கரேக்கு ஷிண்டே விடுத்த செய்தியில், “பாஜக கூட்டணிக்கு உத்தவ் மீண்டும் உடன்பட வேண்டும்” என்ற அரசியல் பிளாக்மெயிலை வெளிப்படையாக ஆரம்பித்துள்ளார்.

288 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மகாராஷ்டிரத்தின் 2019 தேர்தலின் முடிவில், முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற கோதாவில் தனது கூட்டணிக் கட்சியான பாஜகவுடன்(106) உறவைத் துண்டித்தது சிவசேனா (55). பின்னர் காங்கிரஸ் (44), தேசியவாத காங்கிரஸ் (51) கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு தலைமையேற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய நிலைமையில் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை தராசு தடுமாறி வருகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் தங்கள் தரப்பில் 37 எம்எல்ஏ-க்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதனை மறுத்திருக்கும் சிவசேனா, அதிருப்தியாளர்கள் 18 பேர் மட்டுமே என்கிறது. ஷிண்டே வசம் மூன்றில் 2 பங்கு எம்எல்ஏ-க்கள் இருப்பதாக சொல்லப்படுவது சிவசேனா முகாமை கலங்கச் செய்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

பாஜக முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்நவிஸ், கட்சி தலைமையுடன் கலந்தாலோசிக்க டெல்லி பறந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏ-க்கள் எவரும் குதிரை பேரத்தில் வீழாதிருக்க கண்கொத்தியாய் அவர்களைக் காத்து வருகிறது. ’குஜராத் சூரத்தில் கூவத்தூர் பாணியில் அதிருப்தியாளர்களை அம்மாநில போலீஸார் சிறை வைத்திருப்பதாகவும், வாய்ப்புக் கிடைத்தால் மகாராஷ்டிர போலீஸார் அதிருப்தியாளர்களை மீட்டு வருவார்கள்’ என்றும் சிவசேனா கட்சியினர் பேசி வருகின்றனர். சரத்பவாரின் சார்பில் தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் தொடர்ந்து கலந்து வருகிறார்.

மகா விகாஸ் அகாதி கூட்டணி பெரும்பான்மை இழந்தால், பாஜக ஆதரவில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைக்க முன்வரலாம். ஆனால், முதல்வர் நாற்காலியை மீண்டும் விட்டுத்தர பாஜக முன்வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களைப் பொறுத்தவரை ’முழுவதுமாக பாஜகவிடம் சரண்டராவது மக்கள் மத்தியில் மதிப்பைக் குறைக்கும்’ என்ற தயக்கம் தென்படுவதால், பாஜக தலைமையிலான ஆட்சி அமைவதிலும் இழுபறியே நீடிக்கும். எனவே, தற்போதைக்கு ஆட்சியை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமலாக்க பாஜக கோரலாம். இது சிவசேனாவை வஞ்சம் தீர்க்க உதவலாமே தவிர, அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு உதவாது. மகாராஷ்டிரத்தில் தொடரும் அரசியல் நிலையற்ற தன்மையை எந்த வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் மட்டும் பாஜக குறியாக இருக்கிறது.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

பாஜகவின் பிரபல ஆட்சி கவிழ்ப்பு வியூகமான ’ஆபரேஷன் லோட்டஸ்’ மகாராஷ்டிராவில் தற்போது எடுபடுமா என்பதே அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக நீடிக்கிறது. பாஜக மத்தியில் ஆட்சியமைத்தில் இருந்தே, பல்வேறு மாநிலங்களில் ஆளும் பாஜக அல்லாத கட்சிகளை ஆட்டம் காணச் செய்து ஆட்சியைக் கைப்பற்றி வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது. ‘ பாஜகவின் கவிழ்ப்பு முயற்சிகள், மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தை ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியை பதம் பார்ப்பதாக’ சரத் பவார் தற்போது சீறியிருக்கிறார். அவர் கவலையுறும் அளவுக்கு பாஜகவின் ’ஆபரேஷன் லோட்டஸ்’ அத்தனை வீரியமானது.

அருணாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் ஆபரேஷன் லோட்டஸ் வெற்றி பெற்றிருக்கிறது. மாறாக, உத்தராகண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் முன்னதாக தோல்வியடைந்துள்ளது. மனம் தளராத வேதாளமாக, மகாராஷ்டிராவில் மீண்டும் கிடைத்த வாய்ப்பில் ஆபரேஷன் லோட்டஸ் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது பாஜக.

முடிவு என்னவாக இருக்கும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in