பனிப்பொழிவால் உறைந்து போன ஊட்டி: மறந்து போன வெயில்

பனிப்பொழிவால் உறைந்து போன ஊட்டி: மறந்து போன வெயில்

நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், அங்கு உறைந்து போகும் அளவுக்கு 2 டிகிரி வரை குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

நீலகிரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பனியின் தாக்கம் அதிகரித்தது. பனி பொழிவு அதிகரிப்பால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கி உள்ளன. தேயிலை செடிகள் முற்றிலும் கருகாமல் இருக்க தென்னை ஓலைகள் மற்றும் தாவை செடிகளைக் கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். சில இடங்களில் தேயிலை செடிகளை காவாத்து செய்யும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மலை காய்கறிகளை பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உதகையில் கடந்த மூன்று நாட்களாக உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியசும் பதிவாகி வருகிறது.

பனிப்பொழிவால், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் வெப்பநிலை1 டிகிரி செல்சிற்கு சென்றுள்ளது. அப்பர்பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் -1 டிகிரி செல்சியசிற்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. நேற்று இரவு பனி கொட்டியதால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியது போல் உள்ளது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. அதிகாலை நேரங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியுள்ள நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in