‘பாஜகவுக்குச் சவால்விட காங்கிரஸால்தான் முடியும்!’ - கட்சியிலிருந்து வெளியேறிய குலாம் நபி திடீர் புகழ்ச்சி!

‘பாஜகவுக்குச் சவால்விட காங்கிரஸால்தான் முடியும்!’ - கட்சியிலிருந்து வெளியேறிய குலாம் நபி திடீர் புகழ்ச்சி!

குஜராத் மற்றும் இமாசல பிரதேச பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்குச் சவால்விட காங்கிரஸால் மட்டும்தான் முடியும் எனக் கூறியிருக்கிறார் ஜனநாயக விடுதலைக் கட்சியின் தலைவரும், காங்கிரஸின் முன்னாள் முக்கியத் தலைவருமான குலாம் நபி ஆசாத்.

52 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த குலாம் நபி ஆசாத், கட்சிக்கு முழு நேரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சோனியா காந்திக்குப் பகிரங்கக் கடிதம் எழுதிய ஜி23 தலைவர்களில் பிரதானமானவர். தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்துவந்தவர், ஆகஸ்ட் 26-ல் கட்சியிலிருந்து விலகி ஜனநாயக விடுதலைக் கட்சியைத் தொடங்கினார்.

காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் குலாம் நபி ஆசாத் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியிருந்தாலும் அக்கட்சியின் மதச்சார்பின்மை கொள்கையை எதிர்க்கவில்லை. கட்சியின் அமைப்பு பலவீனமாகிக்கொண்டே சென்றதைத்தான் எதிர்த்தேன். குஜராத் மற்றும் இமாசல பிரதேசத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றே இப்போதும் விரும்புகிறேன். பாஜகவை எதிர்கொள்ள ஆம் ஆத்மி கட்சியால் முடியாது” என்று அவர் கூறினார்.

இந்துக்கள், முஸ்லிம்கள், விவசாயிகள் என அனைவரையும் உள்ளடக்கிய கட்சி காங்கிரஸ் என்று கூறிய அவர், இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சியால் எதுவுமே செய்ய முடியாது. ஏற்கெனவே பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டது. அம்மாநில மக்கள் அக்கட்சிக்கு மீண்டும் வாக்களிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.

“ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு மட்டுமான கட்சியாகவே இருக்கிறது. அவர்களால் பஞ்சாபில் சிறப்பாக ஆட்சிசெய்ய முடியவில்லை. குஜராத்திலும் இமாசல பிரதேசத்திலும் பாஜவுக்குச் சவால்விட காங்கிரஸால் மட்டுமே முடியும். காரணம் - அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அதன் கொள்கைதான்” என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in