திருவண்ணாமலை மகாதீபம்: இணையத்தின் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு!

திருவண்ணாமலை மகாதீபம்: இணையத்தின் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு!

திருவண்ணாமலை பரணி தீபம் மற்றும் மகா தீபத்தில் பங்கேற்ற வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கடந்த 27-ம் தேதி தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா, டிசம்பர் 6-ம் தேதி மகாதீப பெருவிழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காகச் சிறப்புப் பேருந்துகள், உள்ளூர் விடுமுறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எனப் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் அடுத்தடுத்து மாடவீதியில் பவனிவரும் காட்சியைப் பார்க்க மக்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை பரணி தீபம், மகா தீபத்தில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.


இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், “கார்த்திகை தீபத்தன்று அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதன்படி ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதிச் சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதிச் சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த அனுமதிச் சீட்டுகள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். நாளை (03.12.2022) காலை 10 மணி முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் இமெயில்  முகவரி கண்டிப்பாகத் தேவை. ஓர் ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

 ஆன்லைன் மூலம் டிக்கெட் மூலம் பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2 தீப நிகழ்வுகளைக் காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in