ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சிபிசிஐடி அதிகாரிகள்: வழக்கு விசாரணைக்காக புது யுக்தியை கையாளுவதாக தகவல்

ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சிபிசிஐடி அதிகாரிகள்: வழக்கு விசாரணைக்காக புது யுக்தியை கையாளுவதாக தகவல்

ஆன்லைன் சூதாட்ட விவரத்தை அறிந்து கொண்டு அரசு அறிக்கை சமர்பிக்க சிபிசிஐடி அதிகாரிகள் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அதன்படி தமிழகம் முழுதும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்ட 17 வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி் வருகின்றனர்.

காவல் துறையில் ஒவ்வொரு வழக்கை விசாரணை செய்து குற்றவாளிகளக் கண்டுபிடிக்கும் போது போலீஸார் மாறுவேடத்தில் செல்வது, வியாபாரி போல் நடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஓன்று ஆனால் தற்போது ஆன்லைன் சூதாட்டத்தைத் தெரிந்துக்கொள்ள அதிகாரிகளே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் இறங்கியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் முதலில் சிறிய தொகைகளை வைத்து விளையாடுபவர்களை நல்ல லாபம் பார்க்க வைத்து, பின்னர் படிப்படியாக கட்ட வேண்டிய பந்தயத் தொகையை அதிகரித்து, இறுதியில் மிகப்பெரிய தொகைகளைக் கட்டி விளையாடும் எதிராளியிடம் இருந்து மொத்த பணத்தையும் சுருட்டி விடும் வேலையை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் அவர்களுடைய விளையாட்டுகளை எப்படி அமைத்துள்ளனர், எந்த கட்டத்தில் விளையாடுபவர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது, எதிர்பக்கம் விளையாடுவது கம்ப்யூட்டரா அல்லது மனிதரா உள்ளிட்ட பல சந்தேகங்கள் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு எழுந்துள்ளன.

இதையடுத்து முதற்கட்டமாக உயிரிழந்த 17 பேர் விளையாடிய விளையாட்டு நிறுவனங்களான ட்ரீம் லெவன், ரம்மி, ரம்மி கல்ச்சர், லூடோ, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டம் நிறுவனங்களுக்கு இந்த வழக்குத் தொடர்பாக சுமார் 20 கேள்விகளைக் கேட்டு அதற்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதே வேளையில் வழக்கை இன்னும் தீவிரமாக புலன்விசாரணை செய்யவேண்டுமென்றால் அவர்கள் எப்படி விளையாட்டுகளை அமைத்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக உயர் அதிகாரிகள் இந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ரம்மி, ரம்மி கல்ச்சர், லுடோ, ட்ரீம் லெவன் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி அதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அதன்பேரில் ஒவ்வொரு அதிகாரியும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஃபோனில் பதிவிறக்கம் செய்து, அதில் மிகச் சிறிய அளவிலான தொகைகளைக் கட்டி விளையாண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரம்மி விளையாடத் தெரியாத அதிகாரிகளை, ரம்மி விளையாட்டை கற்றுக்கொண்டு விளையாட சொல்லியும், ரம்மி விளையாட தெரிந்த அதிகாரிகளிடம், தெரியாத அதிகாரிகள் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் தமிழக சிபிசிஐடி போலீஸார் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைச் சாதாரண நபர்கள் போன்று விளையாடி, கண்காணித்து, வருகின்றனர். மேலும் ஆன்லைன் சூதாட்ட விவரத்தை அறிந்து கொண்டு அதுகுறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிற்பதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in