ஆன்லைனில் வேதிப்பொருட்கள் வாங்குபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்: காவல்துறை தகவல்

மீட்கப்பட்ட செல்போன்களுடன் கோவை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
மீட்கப்பட்ட செல்போன்களுடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்

கோவை கார்  குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து கூரியர் மூலமாக வேதிப்பொருட்கள் வாங்குபவர்களை கண்காணித்து வருகிறோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் காணாமல் போன 19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஆண்டு மட்டும் 750 செல்போன்கள் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் போதைப்பொருள் விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை, செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கோவை மாவட்டத்தில் 1,341 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 1,550 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 68 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் போக்சோ சம்பந்தமான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 310 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

போக்சோ வழக்கில் கடந்தாண்டு 170 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2 மாதத்தில் போக்சோ சம்பந்தமாக 23 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தை பொறுத்த வரை 250 கிராமங்கள் கஞ்சா இல்லா கிராமமாக மக்கள் அறிவித்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து கூரியர் மூலமாக வேதிப்பொருட்கள் வாங்குபவர்களை கண்காணித்து வருகிறோம். பொள்ளாச்சியில் ஒருவர் அதிக அளவு வாங்குவதாக கிடைத்த தகவலின்படி விசாரித்தபோது, அவர் விவசாய தேவைக்காக வாங்கியது தெரியவந்தது. மேலும் யாராவது ஆன்லைனில் சந்தேகம் படும்படியான பொருட்களை ஆர்டர் செய்தால், தகவல் தெரிவிக்கும்படி கூரியர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in