9 பேருடன் சென்ற ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர்... அரபிக் கடல் மீது அவசரமாகத் தரையிறக்கம்: நடந்தது என்ன?

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கோப்புப் படம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு (ஓஎன்ஜிசி) சொந்தமான ஹெலிகாப்டர், இன்று காலை அரபிக் கடல் பகுதி மீது பறந்து சென்றுகொண்டிருந்தது.

2 விமானிகள் இயக்கிய அந்த ஹெலிகாப்டரில் 7 பயணிகள் இருந்தனர். அவர்களில் 6 பேர் ஓஎன்ஜிசி அதிகாரிகள் என்றும், ஒருவர் அந்நிறுவனத்துக்கான ஒப்பந்ததாரர் என்றும் கூறப்படுகிறது. காலை 11.50 மணி அளவில் மும்பையிலிருந்து 60 கடல் மைல்கள் மேற்கே அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ’சாகர் கிரண்’ எண்ணெய்த் துரப்பன மேடை அருகில் கடல் மீது அந்த ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடல் மீது அமைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்த் துரப்பன அமைப்புகளுக்குச் சென்றுவரும் ஹெலிகாப்டர்களில் ஃப்ளோட்டர்ஸ் எனப்படும் மிதவை அமைப்பு உண்டு. அதைப் பயன்படுத்தி கடல் நீர் மீது இந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அவசரமாகத் தரையிறக்கும் அளவுக்கு ஹெலிகாப்டரில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. முதலில் 6 பேர் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. மீட்புப் பணிகளுக்காக ‘மால்வியா 16’ எனும் விநியோகக் கப்பல் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலோரக் காவல் படையின் விமானம், அங்கு ஒரு மிதவைப் படகை இறக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக இன்னொரு கப்பலும் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அரபிக் கடலில் இதுபோன்ற ஏராளமான எண்ணெய்த் துரப்பன அமைப்புகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்திருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி கடலுக்கு அடியிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in