ஒரு வயது குழந்தையின் மரணத்துக்கு காரணமான விசில்: வீட்டில் விளையாடியபோது நடந்த துயரம்!

ஒரு வயது குழந்தையின் மரணத்துக்கு காரணமான விசில்: வீட்டில் விளையாடியபோது நடந்த துயரம்!

விளையாடிக் கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கிய விசிலால் ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பூந்தமல்லி, பத்மாவதி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ்(38). இவர் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வனஜா என்ற மனைவியும், தர்ஷன்(3) என்ற மகனும், கயல்விழி(1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். வழக்கம் போலக் குழந்தைகள் வீட்டில் விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு வயதுக் குழந்தையான கயல்விழி விசிலை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. விசிலை வாயில் வைத்து ஊதும் போது தவறுதலாக விசில் தொண்டையில் சிக்கிக் கொண்டு மயங்கிய நிலையிலிருந்துள்ளது குழந்தை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையின் முதுகைத் தட்டி விசிலை வெளியே எடுத்துள்ளனர்.

உடனடியாக குழந்தைக்குச் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்கள். மேலும் பூந்தமல்லி காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி அனுப்பி வைத்தனர். விளையாட்டுப் பொருளை வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயதுக் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in