
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் நாளை மறுநாள் முதல் ஒருவார காலத்திற்கு வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அதனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு நாளை அது தொடர்பான பயிற்சி வகுப்புடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பிப்.9-ம் தேதி முதல் வரும் 16-ம் தேதிவரை அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.
இதேபோல் களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நம்பி கோயிலுக்கும் வரும் 16-ம் தேதிவரை பக்தர்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வரும் 11-ம் தேதி சனிக்கிழமை கோயிலில் விசேஷம் என்பதால் அன்று மட்டும் வழக்கமாகச் செல்லும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.