கடத்தல் மையமாகும் தென் மாவட்டங்கள்: செங்கோட்டையில் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

கடத்தல் மையமாகும் தென் மாவட்டங்கள்: செங்கோட்டையில் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

தென்மாவட்டங்களில் தினமும் ஒரு டன் அளவுக்கேனும் கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்க போலீஸாரும், வருவாய்த்துறையினரும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டைப் பெற்றுவருகிறது.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை வசதியானோரும் வாங்குகின்றனர். ஆனால் அது உணவுத்தேவைக்காக இல்லாமல் வெளிச்சந்தைக்கு செல்கிறது. அதேபோல் தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தல் கனஜோராக நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மாதத்திற்கு 20 டன்னுக்கு குறையாமல் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் அண்மையில் தேனி மாவட்டத்தில் ஒரே வீட்டில் இருந்து 20 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை நகராட்சிப் பூங்கா அருகில் முருகாத்தாள் என்பவரது வீட்டில் ஒரு டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்பிரிவு சார் ஆய்வாளர் மாதவனுக்குத் தகவல் வந்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது, வீட்டில் இருந்து மினி வேனுக்கு ரேசன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீஸார் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் வேன் டிரைவர் சேர்ந்தமரம் அருகில் உள்ள கடையாலுருட்டி சர்ச் தெருவைச் சேர்ந்த சுந்தரராஜன்(20) என்ற வாலிபரைக் கைது செய்தனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து ரேசன் அரிசிகள் பிடிபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in