
திண்டுக்கல் அருகே ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்தப்பட உள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்ட போலீஸார், வாகனச்சோதனையையும் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், திண்டுக்கல் அருகே இடையகோட்டை பகுதியில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. வேனில் தலா 50 கிலோ வீதம் 20 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் குள்ளனம்பட்டி கருப்பையா (31), கனகராஜ் (30) ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை கிட்டங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.