சிறையில் இருந்து வெளியே வந்த வன்னியர் சங்க நிர்வாகி: காத்திருந்து நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்டு பழி வாங்கிய கும்பல்!

கண்ணன்
கண்ணன்

மயிலாடுதுறையில் முன் விரோதம் காரணமாக முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் மத்தியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை கொத்தத் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் கண்ணன்(31). ஆம்புலன்ஸ் வாகனம் வைத்துள்ளார். இவர் மயிலாடுதுறை நகர முன்னாள் வன்னியர் சங்க செயலாளராக பொறுப்பு வகித்திருக்கிறார். இவருக்கும் கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவகம் ஒன்றுக்கு சாப்பிட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இது குறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கண்ணன் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் விடுதலை ஆகி ஊருக்கு கண்ணன் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நல்லத்துக்குடி ரஞ்சித்(19), டபீர் தெரு திவாகர்(22) ஆகியோருடன் இரண்டு இரு சக்கர வாகனத்தில் கடைவீதிக்கு வந்திருந்தார்.

அங்கு ஒரு கடையில் பீடா வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை ஒரு கும்பல் வழிமறித்தது. கதிரவன் தலைமையில் வந்த கலைஞர் காலனியை சேர்ந்த அஜித், திவாகர் உள்ளிட்ட அந்த கும்பல் கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.

இதை பார்த்து கண்ணனுடன் வந்த ரஞ்சித் மற்றும் திவாகர் தப்பி ஓடியுள்ளனர். அதனையடுத்து கண்ணனும் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து அதில் ஈடுபட்ட அஜித், திவாகர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய கும்பலை தேடி வருகின்றனர்.

கொலை நடந்த போது கண்ணனுடன் வந்த டபீர் தெரு திவாகர் உள்ளிட்ட பலரை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துள்ள போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டு மேலும் மோதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in