கடன் கொடுக்காத விடுதி மேலாளர் கொலை: ராஜஸ்தான் தப்பி செல்ல முயன்ற ஜவுளி வியாபாரி விருதுநகரில் கைது!

கைதான கோபாலகிருஷ்ணன்
கைதான கோபாலகிருஷ்ணன்

ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு கொடுக்காத விடுதி மேலாளரை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. ராஜஸ்தானுக்கு தப்ப முயன்றவரை விருதுநகரில் கைது செய்தது காவல்துறை.

மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 12 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ். இவர் நேற்று மூக்கில் ரத்தம் வெளியேறிய நிலையிலும், கழுத்தில் ரத்த காயங்களுடனும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

உயிரிழந்த மேலாளர் தர்மராஜ்
உயிரிழந்த மேலாளர் தர்மராஜ்

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கோபாலகிருஷ்ணன் விடுதியில் தங்கி இருந்து மதுரையில் உள்ள ஜவுளி கடைகளுக்கு வட மாநிலங்களில் இருந்து துணிகளை இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. வியாபாரத்தில், போதிய வருமானம் இல்லாததால் கோபாலகிருஷ்ணன், கடந்த சில மாதங்களாக விடுதிக்கு வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

விடுதி மேலாளர் தர்மராஜ், அவரிடம் வாடகை பணத்தை தருமாறும், இல்லையென்றால் விடுதியை காலி செய்யுமாறும் கூறியுள்ளார். ஆனால், தன்னிடம் போதிய பணம் இல்லாத கோபாலகிருஷ்ணன், தர்மராஜிடம் ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். தர்மராஜ் கடன் கொடுக்க மறுத்ததோடு மீண்டும் வாடகை பாக்கியை செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று கோபாலகிருஷ்ணன் அறையில் இருந்து வெளியே வந்தபோது தர்மராஜ் மட்டும் வரவேற்பறையில் இருந்தார். மீண்டும், அவரிடம் ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததோடு தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் தர்மராஜ் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதில், இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், தர்மராஜ் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். இதையடுத்து, அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கோபாலகிருஷ்ணன் சிரமத்துடன் இழுத்துப் பறித்துள்ளார். இதில், தர்மராஜ் கழுத்தில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். இதையடுத்து லாட்ஜை விட்டு அவசரமாக வெளியேறிய கோபாலகிருஷ்ணன் திருடிய நகையுடன் ராஜஸ்தானுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார். இச்சூழலில் விருதுநகரில் இருந்த கோபாலகிருஷ்ணனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in