மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது: கேரளத்தை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்!

மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது: கேரளத்தை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்!

துபாயில் இருந்து திருவனந்தபுரம் திரும்பிய நபர் ஒருவர் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளத்தில் குரங்கு அம்மை வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

குரங்கு அம்மை விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மைகொண்டது. 1958-ம் ஆண்டு, முதன்முதலில் டென்மார்க்கில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பத்துபேருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டால் ஒருவரின் நிலை கவலைக்கிடம் ஆகும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குரங்கு அம்மை நோய்க்கு பிரத்யேக சிகிச்சை அல்லது தடுப்பூசிஇல்லை. இப்போதைய சூழலில் பெரியம்மை தடுப்பூசியே இதற்கும் போடப்படுகிறது.

இந்நிலையில், துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் நேற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் கடந்த 12-ம் தேதி துபாயில் இருந்து கேரளா வந்தார். அவரோடு தொடர்பில் இருந்த 11 பேர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், அவர் பயணித்த டாக்ஸி ஓட்டுனர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர். கேரளத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களிலும் குரங்கு அம்மை நோய் தொடர்பான உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

துபாயில் இருந்து வந்தவரோடு தொடர்பில் இருந்தவர்கள் வசிக்கும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, கோட்டயம், ஆழப்புழை ஆகிய மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி துபாயில் இருந்து கண்ணூருக்கு வந்த நபருக்கும் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களை இன்று சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இதை உறுதி செய்தார். மேலும் தற்போது கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்த நோயாளி நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் அவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in