மறுபடியும் தடைக்கு ஆளான பதஞ்சலி: இது உத்தராகண்ட் நடவடிக்கை

மறுபடியும் தடைக்கு ஆளான பதஞ்சலி: இது உத்தராகண்ட் நடவடிக்கை

பதஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்து பொருட்களுக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யோகா மற்றும் ஆயுர்வேதத்தை முன்வைத்து புகழடைந்தவர் பாபா ராம்தேவ். இவரது கூட்டு முயற்சியில் நிறுவப்பட்ட பதஞ்சலி நிறுவனம், பல்வேறு வகையிலான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அன்றாட நுகர்வு பொருட்களை தயாரித்து சந்தைபடுத்தி வருகிறது. ஆங்கில மற்றும் வெளிநாட்டு பொருட்களுக்கு மாற்றான, பாரம்பரியம் மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலானவை என்று பதஞ்சலியின் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் பதஞ்சலி மருந்துகளின் நம்பகத் தன்மை, உட்பொருட்கள் மற்றும் அவை குறித்த விளம்பரங்கள் தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வருகின்றன. பல தருணங்களில் நீதிமன்றம் வரை பதஞ்சலி குட்டு பெற்றுள்ளது.

தற்போது உத்தராகண்ட் மாநிலத்தின் ஆயுர்வேத மற்றும் யுனானி துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், பதஞ்சலியின் அதிகம் விளம்பரம் செய்யப்பட்ட 5 நிவாரணிகளுக்கு தடை விதித்துள்ளது. உடனடியாக அந்த பொருட்களை கடைகளில் இருந்து திரும்பப் பெறுமாறும், அவற்றின் உற்பத்தியை நிறுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த மருந்துகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் அதிகாரிகள் தடை விதித்தனர்.

நீரிழிவு கட்டுப்பாடு, தைராய்டு பிரச்சினைகள், இரத்த அழுத்தம் உள்ளிட்ட 5 உடல்நல பாதிப்புகளுக்கான பதஞ்சலி மருந்து பொருட்கள் தடைக்கு ஆளாகி இருக்கின்றன. அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்த பதஞ்சலி நிர்வாகம், ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றியே திவ்யா மருந்து பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பதஞ்சலி மீதான உத்தராகண்ட் நடவடிக்கையை ’ஆயுர்வேதத்துக்கு எதிரான மருந்து மாபியாவின் தாக்குதல்’ என்று வர்ணித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in