மாடு முட்டி சூரியூர் ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி

அரவிந்த்
அரவிந்த்

திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து  ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில்  627 காளைகளும், 297 மாடு பிடி வீரர்களும்  கலந்துகொண்டனர். மொத்தம் எட்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர் மற்றும் வீரர்களுக்கு சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் 17 மாடுகளை அடக்கிய திருச்சி பெரிய சூரியூரைச் சேர்ந்த பூபாலன் முதல் பரிசு பெற்றார்.  அவருக்கு இருசக்கர வாகனத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.நவல்பட்டு  ரஞ்சித்  இரண்டாம் இடம் பெற்றார்.  

மாடு பாய்ந்ததில் ஜல்லிகட்டு கமிட்டியைச் சேர்ந்த சம்பத் (29), பார்வையாளர்கள்  வேங்கூரை சேர்ந்த நிவாஸ் குமார் (28), களமாவூர் அரவிந்த் (25),  கள்ளிக்குடி கோபி ( 27 ), சன்னாச்சி பட்டி ராஜேந்திரன் (59), வீரப்பட்டி கார்த்திக் (20), கோவிலடி தனுஷ் (19),கீரனூர், ஸ்டீபன் ராஜ் (22), கண்ணாங்குடி பழனி (14), மாட்டின் உரிமையாளர்கள் சப்பானிப்பட்டி சரத்குமார் (24), எட்டுகல் பட்டி செல்லமுத்து (35) உட்பட 12பேர் காயம் அடைந்து  திருச்சி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டனர்.  இதில் புதுக்கோட்டை களமாவூரைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர்  அரவிந்த் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக ஜல்லிக்கட்டு போட்டியில்  கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in