
தஞ்சாவூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை நேற்றிரவு மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் அண்ணனை கொன்றவர்களைப் பழிவாங்க திட்டமிட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் அருகே பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (36). ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த சுவாமிநாதனை அப்பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் நான்கு பேர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர். அப்போது அவர்கள் சுவமிநாதன் முகத்திலேயே சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனால் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சுவாமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்ட நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சுவாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சுவாமிநாதன் கொலை குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சுவாமிநாதனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக சுவாமிநாதன் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த கொலை தொடர்புடைய நபர்கள் முந்திக்கொண்டு இவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.