சாதாரண குப்பை பிரச்சினை சமூக மோதலாக மாறியது; தேனியில் டிரைவர் அடித்துக் கொலை: நடந்தது என்ன?

கொலை
கொலை

தேனி அருகே குப்பை கொட்டியதில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார். மேலும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பூதிப்புரம் கிராமம்‌. இங்கு பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அருகே சிலர் குப்பை கொட்டி வந்ததை அவர் கண்டித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நேற்று அதே பகுதியைச் சேர்ந்த ஊர்க்காலன் என்பவர் ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு அருகே குப்பை கொட்டியுள்ளார். அப்போது ராதாகிருஷ்ணன், "குப்பையை இங்கு ஏன் கொட்டுகிறீர்கள், வேறு எங்காவது போட்டு தீ வைத்து விட வேண்டியது தானே" எனச் சொல்லி அவரை சத்தம் போட்டுள்ளார். மேலும், அவரது சாதி குறித்து ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஊர்க்காலனின் சமுதாயத்தைச் சேர்ந்த ஓட்டுநரான மகேஸ்வரகுமார், ராதாகிருஷ்ணனை கண்டித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டனர். அப்போது, ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து மகேஸ்வரகுமாரைத் தாக்கியுள்ளார். தடுக்க வந்த அவரது சகோதரர் நாகராஜ் மீதும் உரல் கல்லைப் போட்டுள்ளார். இதில், மகேஸ்வரகுமார், அவரது சகோதரர் நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மகேஸ்வரகுமாரின் மனைவி மாணிக்கவாசுகி, மகள் ஜனனி, நாகராஜின் மனைவி திலகவதி, உறவினர் ராமலிங்கம் ஆகியோர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மகேஸ்வரகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, மகேஸ்வரகுமார் மரணத்திற்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் பூதிப்புரம் - தேனி சாலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, முக்கிய குற்றவாளியான ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்ததாகவும் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பால்சுதர் தெரிவித்தார். அதனை ஏற்று மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பூதிப்புரம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக இறந்தவரின் மகள் ஜனனி அளித்த புகாரின் பேரில் ராதாகிருஷ்ணன், பெரியகருப்பன், செல்வம், தினேஷ், நல்லுசாமி, சதீஷ் ஆகிய ஆறு பேர் மீது கொலைக்குற்றம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வழக்கின் முதல் குற்றவாளியான ராதாகிருஷ்ணன், இரண்டாவது குற்றவாளியான பெரியகருப்பன் மற்றும் ஐந்தாவது குற்றவாளியான நல்லுசாமி ஆகிய மூன்று பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் வரை இறந்தவரின் சடலத்தை வாங்கப்போவதில்லை எனக் கூறி அவரது உறவினர்கள் இன்று பூதிப்புரம் - தேனி சாலையில் இன்று மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையிலான காவல்துறையினர் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் விரைவில் பிடித்து விடுவதாகவும் தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in