கனியாமூர் பள்ளி தாளாளர், பெண் நிர்வாகிக்கு ஒருநாள் போலீஸ் காவல்: மாணவி இறப்பில் மர்மம் விலகுமா?

கனியாமூர் பள்ளி தாளாளர், பெண் நிர்வாகிக்கு ஒருநாள் போலீஸ் காவல்: மாணவி இறப்பில் மர்மம் விலகுமா?

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் கடந்த 13-ம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில் சின்னசேலம் போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது‌. பின்னர் இந்த வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்திருந்தால் உடலில் காயம் ஏற்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் கீழே குதிக்கும்போது மரக்கிளையில் மோதுகிறதா உள்ளிட்டவைகளை அறிய மாணவி எடைக்கு நிகரான எடையளவு கொண்ட பொம்மையை மாடியில் இருந்து கீழே போட்டு சோதனை நடத்தி பார்த்தனர். மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் இவ்வழக்கு தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவர் புஷ்பராணி முன்பு சிபிசிஐடி ஏடிஎஸ்பிகோமதி தலைமையிலான போலீஸார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிமன்ற நடுவர் புஷ்பராணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு அவர்களை காவல்துறையினர் அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை நடக்க உள்ளது. அப்போது, மாணவியின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in