2 ஐம்பொன் சிலைகளோடு பஸ்நிலையத்தில் குறட்டை விட்ட இருவர்: ஒருவரை கோட்டை விட்ட போலீஸார்

2 ஐம்பொன் சிலைகளோடு பஸ்நிலையத்தில் குறட்டை விட்ட இருவர்: ஒருவரை கோட்டை விட்ட போலீஸார்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 ஐம்பொன் சிலைகளுடன் தூங்கிய இருவரில் ஒருவர் தப்பியோடி விட்டார். மற்றொருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இருவரை போலீஸார் இன்று காலை சந்தேகத்தின் அடிப்படையில் எழுப்பி விசாரித்தனர். அப்போது இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரைப் பிடித்து அவர் வைத்திருந்த பையை போலீஸார் சோதனை செய்தனர். அதில் முக்கால் அடி உயரமுள்ள பொன்மணி விளக்கு ஏந்திய சிலை மற்றும் 3 அங்குலம் கொண்ட சிறிய பெருமாள் சிலை ஆகிய ஐம்பொன் சிலைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவரைப் பிடித்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பிடிபட்டவர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் (32) என்பதும், தப்பியோடியவர் கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ் (30) என்பதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருச்சி லால்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த சிலைகளையும், அதனுடன் சேர்ந்து பழைய இரண்டு ரூபாய் நோட்டு மற்றும் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து அதனை சென்னையில் உள்ள குறிப்பிட நபரிடம் காட்டினால் அவர் சிலைகளைப் பெற்றுக்கொண்டு 3 லட்சம் ரூபாய் தருவார் என்றும், அதை வாங்கி வருமாறு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

இதன் பின்னர் சிலைகளைப் பறிமுதல் செய்த கோயம்பேடு போலீஸார் பிடிபட்ட நபரிடம், திருச்சியைச் சேர்ந்த பெண்மணி குறித்தும், சென்னையில் சிலைகளை வாங்க இருந்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய நபரையும் தேடி வருகின்றனர். விசாரணைக்குப் பின் பிடிபட்ட நபரையும், பறிமுதல் செய்த சிலைகளையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க உள்ளதாக கோயம்பேடு போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in