திண்டுக்கல் தம்பதியை ஏமாற்றி 54 லட்சத்துடன் எஸ்கேப்: திருப்பூர் மோசடி மன்னன் டெல்லியில் கைது

திண்டுக்கல் தம்பதியை ஏமாற்றி 54 லட்சத்துடன் எஸ்கேப்: திருப்பூர் மோசடி மன்னன் டெல்லியில் கைது

குறைந்த விலையில் நூல் வாங்கி தருவதாக ஜவுளி வியாபாரிகளை ஏமாற்றி 54 லட்சம் மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த நபரை திண்டுக்கல் காவல்துறையினர் டெல்லியில் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்தவர்கள் சசிகுமார்-ராஜலெட்சுமி தம்பதியினர். இருவரும் இணைந்து ஜவுளி மற்றும் நூல் வியாபாரம் பார்த்து வந்தனர். இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த ராஜாவிடம் குறைந்த விலையில் நூல் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். அவரும், குறைந்த விலையில் நூல் வாங்கித் தருவதாக கூறி ராஜலெட்சுமியிடம் இருந்து 54 லட்சம் ரூபாயை ராஜா பெற்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் அவர் நூல் வாங்கித் தரவில்லை.

பல முறை கேட்டும் முறையான பதில் வராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதியினர், கொடுத்த பணத்தை திரும்பிக் கேட்டதற்கு, பணத்தை தர முடியாது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ராஜலெட்சுமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் குற்றப்பிரிவு காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்ட ராஜாவின் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். இருப்பினும், அவர் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார்கள். இந்நிலையில், டெல்லியில் அவர் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டெல்லி விரைந்த தனிப்படையினர் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும், அவரை இன்று திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் வேறு யாரிடமாவது பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in