
தலையில் ரத்த கசிவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண் குழந்தையின் கை அழுகிய போனதால் அதனை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவருக்கு ஒன்றரை வயதில் முகமது மகிர் என்ற ஆண் குழந்தை உள்ளது. குறை பிரசவத்தில் இக்குழந்தை பிறந்த நிலையில் அதற்கு தலையில் ரத்த கசிவு மற்றும் நீர் கசிவு உள்ளிட்ட சில பாதிப்புகள் இருந்துள்ளன. இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனது குழந்தையை சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் அவர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தையின் வலது கை கடந்த மாதம் 26-ம் தேதி அழுக தொடங்கியுள்ளது. குழந்தையின் கையில் ட்ரிப் போடும் போது ஏற்பட்ட கவன குறைவே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், குழந்தையின் உயிரை காப்பதற்காக அழுகிய கையை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இன்று அந்த குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்திய நிலையில் அறுவை சிகிச்சை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டது.
இதையடுத்து தொடர் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குழந்தையின் கை அழுகுவதற்கு காரணம் தவறான சிகிச்சையா அல்லது மருத்துவ பணியாளர்களின் கவனக் குறைவா என்பது குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.