படிப்புக்காக பீடி சுருட்டிய இந்தியர், இன்று அமெரிக்க நீதிபதி!

உழைப்பு உயர்வு தரும்
மனைவி மகள்களுடன் சுரேந்தர்
மனைவி மகள்களுடன் சுரேந்தர்

கேரளாவின் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டுக்காக பீடி சுருட்டி, பள்ளி கல்லூரி படிப்புகளை மன்றாடி முடித்த இந்தியர் ஒருவர், இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக நீதிபரிபாலனம் செய்கிறார். வாழ்க்கையில் உயர உத்வேகம் கொள்ள விரும்புவோருக்கு இவர் பெரும் முன்னுதாரணம்.

51 வயதாகும் சுரேந்தர் கே படேல், அண்மையில் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃபோர்ட் பெண்ட் கௌண்டியில் மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றார். இந்தியாவின் கேரளத்திலிருந்து அமெரிக்காவின் மாட்சிமை தாங்கிய நீதிமன்றத்துக்கு அவர் கடந்து சென்ற பாதை கரடுமுரடானது நிரம்பியது.

5 குழந்தைகளில் ஒருவராக ஏழைத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த சுரேந்தர் பள்ளிக்கு சென்றது பெரும் அதிசயம். பீடி சுருட்டுதலை தொழிலாக கொண்ட குடும்பத்தில், சதா எந்நேரமும் பீடி இலைகளின் நெடியிலிருந்து தப்பிக்க சுரேந்தரும் அவரது சகோதரியும் அடம்பிடித்து பள்ளிக்கு சென்றார்கள்.

சுரேந்தர்
சுரேந்தர்

பகுதி நேரமாக பொருளீட்டும் பணியை தொடர்வதான உத்திரவாதத்துடன் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால் பொருளீட்டுவதை பிரதானமாகவும், படிப்பை பகுதி நேரமாக தொடர வாய்ப்பளிக்கப்பட்டதால் ஆசிரியர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார் சுரேந்தர். பல முறை பள்ளியிலிருந்து இடை நின்று மீண்டும் சேர்ந்த அனுபவம் அவருக்கு உண்டு. சுரேந்தரின் பின்னணி அறிந்த ஆசிரியர்களே உதவ முன்வந்ததில் பள்ளிப்படிப்பை ஒருவழியாக முடித்தார்.

அரசியல் அறிவியல் பட்டம் படிக்க கல்லூரிக்குச் சென்றபோதும், சுரேந்தரை அதே நெருக்கடி துரத்தியது. சாலையோர கடைகளில் சென்று தனது படிப்பு விவரங்களை சமர்பித்து, ’நீங்கள் பகுதி நேர வேலை கொடுத்தால் படிப்பேன், இல்லையெனில் படிப்பை துறந்துவிட்டு உங்களைப் போலவே நானும் முழுநேரமாக உழைப்பேன்’ என்பாராம். சுரேந்தரின் தெளிவை மெச்சியவர்கள் பகுதி நேர வேலை தந்து அரவணைத்திருக்கிறார்கள்.

நீதிபதியாக சுரேந்தர்
நீதிபதியாக சுரேந்தர்

கல்லூரி படிப்பு என்பதால், கூடுதல் வருமானம் தேவைப்பட்டதில் கூடுதலாக உழைக்க வேண்டியதானது. இதில் கல்லூரி வருகைப் பதிவில் அடிவாங்க, அங்கேயும் ஆசிரியர்களிடம் சரணடைந்தே படிப்பை முடித்திருக்கிறார். அதன் பின்னர் சட்டப்படிப்பு, சுமாரான வாழ்க்கை எல்லாம் சாத்தியப்பட்டிருக்கிறது. நல்வாய்ப்பு சிலதும் அவருக்கு மனைவியாக வாய்த்தவரால் சாத்தியமானது.

மருத்துவமனை ஊழியரான அவரது மனைவி டெல்லி பணிக்கு சென்றதால், சுரேந்தேரும் பின்தொடர்ந்தார். அங்கேயும் பகுதி நேரப்பணி, முழு நேர உயர்படிப்பு என்று உயர்ந்தார். மனைவி பணி நிமித்தம் அமெரிக்கா பயணப்பட்டபோது சுரேந்தரும் அமெரிக்கா சென்றார். அங்கேயும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேரமாக பணிபுரிந்தவாறு, சர்வதேச சட்டங்களுக்கு என தனியாக படித்தார். 2007-ல் அமெரிக்கா சென்றவருக்கு 5 ஆண்டுகள் முன்னர்தான் அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. தற்போது அவரது திறமை மற்றும் தகுதிக்கான அங்கீகாரமாக, மாவட்ட நீதிபதி பொறுப்பு தகைந்திருக்கிறது.

கேரளத்தில் பீடி சுருட்டுவதில் தொடங்கிய ஒரு ஏழை இந்தியனின் உழைப்பும், விடா முயற்சியும், படிப்பை விடாததும் அவரை அமெரிக்காவில் சர்வதேச சட்டம் முடித்து நீதிபதியாக அமர்த்தி இருக்கிறது. கேரளத்தின் முதல் அமெரிக்க நீதிபதி என்பதால், சுரேந்தருக்கு மாநிலத்தில் ஆங்காங்கே கூடி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் சுரேந்தருக்கு உதவிய பிளாட்பாரத்து கடைவாசிகளும் அடக்கம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in