கேரளத்தில் களைகட்டும் ஓணம் பண்டிகை: தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை!

கேரளத்தில் களைகட்டும் ஓணம் பண்டிகை: தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை!

கேரளத்தில் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் எதிரொலியாக பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதில் உச்சமாக ஒரு கிலோ மல்லிகைப்பூ 5,000 ரூபாயாக தோவாளை மலர் சந்தையில் விலை உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் பிரசித்தி பெற்ற மலர் சந்தை உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த மலர் சந்தையில் இருந்து தமிழகம், கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மலர்கள் செல்வது வழக்கம். கேரளத்தின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை நாளைக் கொண்டாடப்படுகிறது. கேரளத்தை ஆண்ட மாவேலி மன்னர் ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை வந்து பார்ப்பதாக ஐதீகம். அந்த நாளே திருவோணமாக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் இருக்கும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவார்கள். ஓணம் பண்டிகைக்கு பூக்களை கொண்டு வரையப்படும் அத்தப்பூ கோலம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தேவைக்காக பூக்கள் அதிகளவில் வாங்கிச் செல்வது வழக்கம். அதிலும் கடந்த இரு ஆண்டுகளாக ஓணப்பண்டிகை கரோனா காரணத்தினால் சுறு, சுறுப்பு இல்லாமல் இருந்தது. இப்போது கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முற்றாகத் தளர்த்தப்பட்டு உள்ளதால் மலையாளிகள் உற்சாகமாக ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் மலையாளிகள் அதிகமாக இருக்கும் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகையை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், தோவாளையில் உள்ள மலர்சந்தையில் கேரள வியாபாரிகள் அதிகளவில் பூக்களை வாங்கக் குவிந்து வருகின்றனர். இதன்காரணமாக நேற்று மாலை வரை கிலோ 2,500 ரூபாய் வரை விலை போன மல்லிகைப்பூ இப்போது கிலோ 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு கிலோ 100 ரூபாயாக இருந்த வாடாமல்லி 300 ரூபாயாகவும், வெள்ளை சிவந்தி 100 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும், அரளி ஒரு கிலோ 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் பிச்சிப்பூ விலை 1500 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாகவும் இன்று ஒரே நாளில் விலை கூடியுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கேட்டபோது, “பூக்களின் வரத்துக் குறைவாக உள்ளது. தொடர்ந்து குமரி மாவட்டத்தில் மழை பொழிந்து வருவதும் ஒரு காரணமாகும். தொடர் மழையினால் பூக்களின் வரத்துக் குறைவாக உள்ளது. அதனால் விலை கூடுகிறது” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in