ரயில்வே மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி: தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்து

கோவையில் பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
கோவையில் பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துரயில்வே மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி: தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்து

கோவை மாவட்டம் சோமனூர் ரயில்வே மேம்பாலத்தில் பஞ்சு நூல் ஏற்றி வந்த லாரி இன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவையை அடுத்த காரணம்பேட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி பஞ்சு நூல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று இன்று புறப்பட்டு வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் (30) என்பவர் ஓட்டிச் சென்றார். சோமனூர் ரயில்வே பாலத்தின் மீது லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென பாலத்தின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் கவுதம் மற்றும் கிளீனர் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீஸார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் சிதறிக்கிடந்த நூல் மூட்டைகள் அகற்றப்பட்டு 2 கிரேன்கள் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்," சோமனூர் ரயில்வே மேம்பாலம் குறுகிய வளைவாக உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கணியூர் சுங்கச்சாவடியைத் தவிர்த்து இவ்வழியாக அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், விபத்துக்களைத் தடுக்கவும், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். பாலத்தில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in