
பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரம் வந்த கார், மதுரை அருகே பாலத்தில் கவிழ்ந்து 3 வயது குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். நேற்றிரவு இவர், தனது குடும்பத்தாருடன் காரில் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கிருஷ்ணகுமாரின் மாமியார் நிர்மலா (54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 வயது மகன் ஸ்வரூப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தான். கிருஷ்ணகுமார், அவரது மனைவி நான்சி உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் 3 பேரும், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சமயநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.