குறைந்தபட்சம் 1,900 ரூபாய், அதிகபட்சம் 3,400 ரூபாய்; ஆம்னி பேருந்துகளில் மீண்டும் கட்டணக் கொள்ளை: கண்டுகொள்ளாத தமிழக அரசு!

குறைந்தபட்சம் 1,900 ரூபாய், அதிகபட்சம் 3,400 ரூபாய்; ஆம்னி பேருந்துகளில் மீண்டும் கட்டணக் கொள்ளை: கண்டுகொள்ளாத தமிழக அரசு!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டும் மீண்டும் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தொடர் குற்றச்சாட்டு  எழுந்ததன் எதிரொலியாக ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.  http://aoboa.co.in என்ற இணையதளத்தில் ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு எனப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலித்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. போக்குவத்துத் துறை அமைச்சரும் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனாலும் ஆம்னி பேருந்துகள் அதை உதாசினப்படுத்தும் விதமாக மீண்டும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊருக்கு இப்போதே சிலர் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். சென்னையிலிருந்து மட்டும் லட்சக் கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் நிலையில் வழக்கம் போல ஆம்னி பேருந்து கட்டணம் கிடுகிடுவெனப் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் சென்னை- திருநெல்வேலி  பயணத்திற்கு 850 முதல்  1,400 வரை வசூலிக்கப்படும். ஆனால் 22-ம் தேதி  குறைந்த பட்சம் 1,900 முதல் 2,940 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை- திருச்சி  பயணத்திற்குச் சாதாரண நாட்களில் 800 முதல்  1,200 ரூபாயாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.  22-ம் தேதி 1,800 முதல் 3,400 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை-சேலம் பயணத்திற்கு 700  முதல் 1,300 இருந்த டிக்கெட் விலை, தற்போது 1,500 முதல் 3,000 வரை வசூலிக்கப்படுகிறது. அதுபோல் 21-ம் தேதி டிக்கெட் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழக அரசு இதில் உரியக் கவனம் செலுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in