‘ஒமைக்ரான் எக்ஸ்பிபி தொற்றை அதிகரிக்கும்: அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்!’

உலக சுகாதார நிறுவனம் எச்சரிப்பதன் பின்னணி என்ன?
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் செளமியா சுவாமிநாதன்
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் செளமியா சுவாமிநாதன்கோப்புப் படம்

ஒமைக்ரான் வைரஸ் திரிபின் எக்ஸ்பிபி துணைத் திரிபின் காரணமாக, உலகம் முழுவதும் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் செளமியா சுவாமிநாதன் எச்சரித்திருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் நேற்று நடந்த, வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் வலைப்பின்னலின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் செளமியா சுவாமிநாதன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “ஒமைக்ரான் திரிபுக்கு 300 துணைத் திரிபுகள் உள்ளன. அவற்றில் எக்ஸ்பிபி துணைத் திரிபு மிகுந்த கவலையளிக்கக்கூடியது. இது மறுஇணைப்பு (recombinant) வைரஸ் ஆகும். இதற்கு முன்பும் இதுபோன்ற மறுஇணைப்பு வைரஸ்களைப் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற துணைத் திரிபுகளுக்குப் பிரத்யேகமான பண்புகள் இருக்கின்றன. எக்ஸ்பிபி துணைத் திரிபுகள், எதிரணுக்களையும் (antibodies) தாண்டி பரவக்கூடியவை. எனவே, இந்தத் துணைத் திரிபால் சில நாடுகளில் கரோனா அலை மீண்டும் உருவாகலாம்” என்று கூறினார்.

எக்ஸ்பிபி துணைத் திரிபின் காரணமாக, மீண்டும் கரோனா தொற்று (Re-infection) ஏற்படலாம் என்று எச்சரித்த செளமியா சுவாமிநாதன், இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், உடலின் அனைத்து பாகங்களையும் பாதிப்பு ஏற்படலாம் என்று குறிப்பிட்டார். பிஏ.2, பிஏ.2.75 ஆகிய திரிபுகளிலிருந்து இந்தத் துணைத் திரிபு உருவானதாகக் கூறப்படுகிறது.

தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்தாலும் கரோனா பரிசோதனை தொடர வேண்டும் என்று கூறிய செளமியா சுவாமிநாதன், மூன்று தவணை தடுப்பூசியையும் செலுத்துவதில் உலக நாடுகள் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மூன்றாவது தவணை தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்துவதில் இந்தியா உட்பட பல நடுகளில் சுணக்கம் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா, டிமாண்ட் இல்லாததால் கோவிஷீல்டு பூஸ்டர் டோஸ் உற்பத்தியைத் தனது நிறுவனம் நிறுத்திவிட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in