500-ஐத் தாண்டிய ஒமைக்ரான்!

பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு!
500-ஐத் தாண்டிய ஒமைக்ரான்!

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலும் கரோனா தொற்றும் கணிசமாக அதிகரித்துவருவதை அன்றாடம் மத்திய சுகாதாரத் துறை அன்றாடம் வெளியிடும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை (டிச.26) மட்டும், 6,987 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 76,766 ஆக உயர்ந்திருக்கிறது. 162 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், இந்தியாவில் கோவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 4,79,682 ஆக உயர்ந்திருக்கிறது.

அதேபோல, ஒமைக்ரான் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 422 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 130 பேர் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 500-க்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசத்திலும், இமாசல பிரதேசத்திலும் ஒமைக்ரான் தொற்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒமைக்ரான் தொற்றுக்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம்தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரை 108 பேர் அம்மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலங்கானாவில் 41 பேர், கேரளத்தில் 38 பேர் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், ஜனவரி 10 முதல் முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசிகள் போடப்படும் எனப் பிரதமர் மோடி அறித்ததும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கோவிட் - 19 நான்காவது அலை பரவிவரும் நிலையில், கரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறியிருக்கும் சுகாதாரத் துறை அமைச்சகம், பண்டிகைக் காலம் என்பதால் கூடுதல் கவனம் அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

கர்நாடகத்தில், டிசம்பர் 28 முதல் 10 நாட்களுக்கு இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது. டெல்லியில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஒமைக்ரான் தொற்று அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரத்தில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை, பொது இடங்களில் - அருகருகே 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், மருத்துவ சிகிச்சைக்கான ஆக்சிஜனின் தேவை 800 மெட்ரிக் டன்னை எட்டும் வரை ஊரடங்கு அமல்படுத்தப்படாது என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு தமிழக அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in