நாகா மக்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை சிப்பாய்கள்!

என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு குற்றச்சாட்டு
என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பினர்
என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பினர்

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் (ஆஃப்ஸ்பா) நிழலில் அரசியல் பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை என நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் ஐசக் - முய்வா (என்எஸ்சிஎன் (ஐஎம்)) அமைப்பு கூறியிருக்கிறது. “ரத்தம் சிந்தும் நிகழ்வுகளும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளும் ஒன்றாக நடக்க முடியாது” என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

டிச.4-ல் நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் 14 பேரை அசாம் ரைபிள் படையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்துக்குப் பின்னர், ஆஃப்ஸ்பா சட்டத்துக்கு எதிரான குரல்கள் வலுத்திருக்கின்றன.

அசாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து ‘நாகாலிம்’ எனும் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் என்எஸ்சிஎன் (ஐஎம்), என்எஸ்சிஎன்(கே) உள்ளிட்ட நாகா குழுக்கள் இயங்கிவருகின்றன. நாகாலாந்து விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் பல்வேறு குழுக்களில் மிகப் பெரியது என்எஸ்சிஎன் (ஐஎம்).

1997 முதல் அந்த அமைப்பு சண்டை நிறுத்தத்தைக் கடைபிடித்துவருகிறது. 2015 ஆக.3-ல், டெல்லியில் பிரதமரின் இல்லத்தில், பிரதமர் மற்றும் உள் துறை அமைச்சரின் முன்னிலையில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் துய்ங்கலேங் முய்வாவுக்கும் மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அது வரைவு ஒப்பந்தம்தான். அதன் பிறகு இன்னமும் இறுதிவடிவம் பெறவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி (தற்போதைய தமிழக ஆளுநர்), பல்வேறு விஷயங்களில் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு முரண்டுபிடிப்பதாக விமர்சித்துவந்தார்.

வெளிமாநிலங்களிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் சரக்கு வாகன ஓட்டிகளிடம், என்எஸ்சிஎன் (ஐஎம்) உள்ளிட்ட அமைப்புகள் வரி வசூல் செய்துவருகின்றன. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஆண்டுக்கு 12 சதவீதத்தை வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றன. ஒரு போட்டி அரசாங்கத்தையும் நடத்துகின்றன.

“நாகா பிரச்சினையைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கையாள்வதில் ஆளுநர் மகிழ்ச்சியடைகிறார் என்றால், நீண்டகாலமாக இருந்துவரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர் பொருத்தமான நபர் அல்ல என்றே கருத வேண்டியிருக்கிறது” என்று அந்த அமைப்பு பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தங்கள் அமைப்பினர் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவது அமைதி ஒப்பந்தத்தை முடக்குவதாகவும் என்எஸ்சிஎன் (ஐஎம்) குற்றம்சாட்டியது.

இந்நிலையில், மோன் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது அந்த அமைப்பு.

“நாகா அமைதி ஒப்பந்தத்தில் மனித மாண்பு ஒரு அங்கமாக சேர்க்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கும் அந்த அமைப்பு, “ஆஃப்ஸ்பா சட்டம் இருக்கும் துணிச்சலில் நீதிமன்ற விசாரணை குறித்த பயம் இல்லாமல் நாகா மக்களை மனிதர்கள் அல்லாதவர்களாக சிப்பாய்கள் நடத்துகின்றனர்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறது. கொல்லப்பட்ட 14 பேரின் உடைகளைக் களைந்து, பயங்கரவாதிகள் அணிவதுபோன்ற உடைகளை அணிவிக்க ராணுவத்தினர் முயன்றதாகவும், கிராம மக்கள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்ததாகவும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவாக நிற்பதாகவும் என்எஸ்சிஎன் (ஐஎம்) விமர்சித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in