விரட்டிய நாயால் வந்தது பிரச்சினை: முதியவரைக் குத்திக் கொன்ற தாய், மகன்கள் கைது

விரட்டிய நாயால் வந்தது பிரச்சினை: முதியவரைக் குத்திக் கொன்ற தாய், மகன்கள் கைது

திண்டுக்கல் அருகே நாயை விரட்ட பேரனிடம் கம்பு எடுத்து வரச்சொன்ன முதியவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய் மற்றும் 2 மகன்களை போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டி உலகம்பட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன்(65). நேற்று முன் தினம் மாலை இவர் விவசாய இடத்தை பார்வையிடச் சென்றார். அன்றிரவு ராயப்பன் வீடு திரும்பியபோது, அவரது பேரன் அருகே ஓடி வந்தார். அப்போது பக்கத்து வீட்டு நாய் ஓடி வந்தது. பேரனை நாய் கடித்து விடக்கூடும் என்ற அச்சத்தில் நாயை விரட்ட கம்பு எடுத்து வருமாறு பேரனிடம் ராயப்பன் கூறினார்.

தாங்கள் செல்லமாக வளர்த்து வரும் நாயை, நாய் என எப்படி சொன்னீர்கள் என பக்கத்து வீட்டைச் சேர்ந்த வின்சென்ட், ராயப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் சிறிது நேரத்தில் அவர்களுக்குள் மோதல் உருவானது. இதில், ஆத்திரமடைந்த வின்சென்ட் தம்பி டேனியல் ராஜா கத்தியால் குத்தியதில் ராயப்பன் உயிரிழந்தார். இதனையடுத்து வின்சென்ட் குடும்பத்தார் தலைமறைவாகினர். இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இக்கொலை தொடர்பாக நிர்மல் பாத்திமா ராணி (47), இவரது மகன்கள் டேனியல் ராஜா (21),வின்சென்ட்(23) ஆகியோரை போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர். கொலையில் வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in